டாக்டர் எம், முன்புபோல் மாறிவிடுவார் என்று மக்கள் அச்சம்

16 மாதங்களுக்கு முன்பு, 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) வெற்றி பெற்றபோது, பலரிடம் இருந்த நம்பிக்கையைப் போலவே தனக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

இருப்பினும், சில தினங்களுக்கு முன், அன்வாருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று மகாதிர் வெளியிட்ட அறிக்கையினால் அந்த நம்பிக்கை அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மகாதீரின் விளக்கத்தைக் கேலிக்குரியது என்று வர்ணித்த சார்லஸ் : “நாட்டைக் கட்டியெழுப்புவதை விட அதிகாரத்தைப் பாதுகாப்பதில்தான் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதை அறிக்கை காட்டுகிறது,” என்றார்.

“மக்கள் இப்போது அன்வாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கத் தயாராக உள்ளனர். காரணம், மகாதீர் தனது பழைய வழிக்குத் திரும்பிவிடுவாரோ என மக்கள் பயப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று மெர்டேகா தினத்துடன் இணைந்த ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“சுதந்திர தின வாழ்த்துச் செய்தியின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும், மக்களுடன் நட்பாக இருக்கும், வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முயற்சிக்கும், கல்வி முறைக்குப் புதிய சுவாசத்தைக் கொடுக்கும் ஓர் அரசாங்கத்தைப் பற்றி எழுத வேண்டுமென நான் கற்பனை செய்கிறேன் …

“பல முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இப்போது அமைச்சரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையை பேச தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் அடகு வைக்கத் தயாராக இருக்கிறார்கள்.

“ஆனால், இந்தச் சுதந்திர தினத்தின் போது, இந்த சிந்தனை ஏற்புடையதாக இல்லை என்பதை நான் உணர்கிறேன். இன்று நாம் மக்களின் சாம்பியன் அல்ல, மக்கள் நம் மீது கோபமாக இருக்கிறார்கள், நாம் துரோகமும் செய்துவிட்டதாக உணர்கிறார்கள். இப்போது பொதுத் தேர்தல் வந்தால், நாம் ஆட்சியைக் கைவிடவேண்டிய சூழல் ஏற்படலாம்,” என அவர் மேலும் சொன்னார்.

நேற்று, அன்வாருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று மகாதிர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி, அந்த அறிக்கையில் மகாதீர் தெரிவிக்க விரும்பும் செய்தி குறித்து அறிய ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லாத காரணமா அல்லது அன்வார் அமைச்சர் பதவியேற்க, இப்போதைக்கு தகுதியற்றவர் என்று மகாதீர் கருதுகிறாரா? அல்லது மகாதீர் பதவி விலகும்போது அன்வார் பிரதமர் பதவியை ஏற்பாரா?” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட அதிகார மாற்று திட்டத்தை முறியடிக்க ஏதாவது முயற்சிகள் நடக்கிறதா என்றும் அவர் கேட்டார்.

“பிஎன்-னுக்கு எதிரான வெற்றிக்குத் தலைமையேற்ற மகாதீருக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆனால், அந்தத் தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்க, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த அன்வாரின் மகத்தான தியாகத்தை மறந்துவிடாதீர்கள்,” என்று அவர் கூறினார்.

பி.என்-ஐ எதிர்கொள்ள, பி.எச் கூட்டணியை உருவாக்கிய டிஏபி தலைவர்களின் தியாகத்திற்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார்

‘தூங்கும் அரசாங்கம் எழும்ப உதவுங்கள்’

மே 9, 2018-ல், பி.என். வீழ்ச்சியடைந்த பின்னர் மக்கள் உணர்ந்த “பரவசத்தை” மீண்டும் வலியுறுத்திய சார்லஸ், ஆனால் இப்போதூ “ஊழல் ஆட்சிக்குப் பதிலாக சர்வாதிகார அரசாங்கம்” அமைந்துவிட்டதாக மக்கள் இப்போது உணர்வதாகக் கூறினார்.

“மகாதீர் (புதிய) தேசிய காரைவிட்டு நகரவில்லை, அதே நேரத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் மொஹமட் ரிட்ஜுவான் யூசோஃப் பறக்கும் கார் திட்டத்தில் கவனம் செலுத்துகிறார்.

“RM980 தொகை, ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ஒரு நாள் செலவழிக்க RM8 மட்டுமே என்று அர்த்தம், இருந்தாலும், அரசாங்கத்தின் கூற்றுப்படி அது வறுமையைப் பிரதிபலிக்கவில்லை. எங்களுக்கு வாக்களித்த மக்கம், ஏமாற்றப்படுவதை ஏன் உணரவில்லை என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆனால், பி.எச். அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க நேரம் இதுவல்ல, அது இன்னும் ‘இளமை’யாக இருப்பதாக சாரலஸ் நம்புகிறார்.

“மக்களின் நலனுக்காக, புதிய அரசாங்கத்தை உருவாக்க உதவ வேண்டிய நேரம் இது. பி.எச். அரசாங்கத்தின் தூக்கத்தைக் கலைக்க வேண்டியப் பொறுப்பு நமக்கெல்லாம் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.