வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்

அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது  ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம்,  மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை  வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின்  அவலங்களை சரி கட்ட  வேண்டியுள்ளது என்கிறார் , நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

“புதிய மலேசியாவில் இரண்டாம்  ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்”, என்றவர் வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் என்றும், மக்கள் இதை உணர்வதோடு நாடு நாட்டு மக்களுக்கே சொந்தம் என்ற உரிமை கொண்ட பொறுப்புணர்சியை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்.

“புதிய மலேசியாவுக்காக இந்நாட்டு மக்கள் செய்த அர்ப்பணிப்பை, அவர்கள் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்தைத் தவறு என நிரூபிக்க, மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை, பதற்றத்தை  உருவாக்கி மக்களைத் தூண்டி விடும் ஒரு அதீத முயற்சியில் ஒரு  குள்ளநரி கூட்டம் இறங்கியுள்ளதை நாம்  அறிவோம்.”

“அன்று அன்னியர்களின் சுரண்டல் ஆட்சியிலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக மலாயாவை நிர்மாணிக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் அவர்கள் எடுத்துக் கொண்ட சகல முயற்சிகளையும் வீணடித்து, நாட்டைச் சுரண்டி விட்ட அதே கூட்டம், மக்கள் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து மேற்கொண்டுள்ள  இப்புதிய சீரமைப்பு முயற்சியையும் சிதைக்கப் பாடுபடுகிறது.”

கடந்த ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட  சமயம் – இனம் என்ற அடிப்படையில் வேரூண்டியுள்ள ஆட்சியமைப்பு, அதை கருவியாக கொண்டு  இன, மதப் பேதங்களை உரமிட்டு வளர்த்து விட்டுவிட்டது.  இன்று  மக்கள் பிளவு பட்டு நிற்கின்றனர்.

ஓர் ஒற்றுமையான, முதிர்ச்சியான ஆக்கத் திறன் கொண்ட மக்களை உருவாக்க நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ஊடகச் சுதந்திரமும், மக்கள் ஒன்றுகூடவும், சுதந்திரமாகக் கருத்துரைக்கவும், கண்டனங்கள் செய்யவும் இந்த அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடு அற்ற சுதந்திரங்களே, இன்று,  இந்த அரசுக்குச் சோதனையாக அமைந்திருந்தாலும். புதிய மலேசியாவின் முற்போக்கான கொள்கைகளிலிருந்து அரசாங்கம் பின் வாங்காது. மக்களுக்கு அது அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடும் என்கிறார் சேவியர். மேலும்,

ஒரு நாடு புதிய பரிணாமம் பெருவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படும் , புதிய  ஆட்சியில் சில மாற்றங்களும் , அணுகு முறைகளும் முன்  இருந்ததைப் போன்று அன்றி வேறுபட்டிருப்பதைக் கண்டு மக்கள்  அஞ்ச வேண்டியதில்லை மாறாகச் சேர்ந்து பயணிக்க  முயலவேண்டும், அதே வேளையில்,  தேச விரோதிகளின்  வஞ்சக வலையில் சிக்காமல் தவிர்பதே அறிவார்ந்த சமுகத்திற்கு நலன்.

அதோடு இந்நாட்டின் , புதிய  அரசின்  வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும்  மக்களே சொந்தக்காரர்கள்,  மக்களின்  எதிர்கால நலனுக்கு திட்டமிடுவதே, உங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு பாதை அமைப்பதே நமது நோக்கமேயன்றி, அடுத்த தேர்தல் வெற்றிகளை மட்டும் பெறுவதில்லை என்கிறார். றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர்.