பக்கத்தான் ஹரப்பானால் 2023-இல் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா?
மலேசியாவைக் காப்போம்: முடியும் . அதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், நாட்டு நடப்பைப் பார்க்கையில் ஹரப்பானுக்கு எதிராக மக்களின் ஆத்திரமும் ஏமாற்றமும் அல்லவா நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது.
என்னைக் கேட்டால் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் புதிய மலேசியா பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 1மலேசியா போல் அதுவும் ஒரு வெற்று வேட்டு என்றாகிவிட்டது.
மலேசியா 2030: ஹரப்பானால் திறம்படச் செயல்பட முடியாமல் உள்ளது. ஏனென்றால், அமைச்சர்களில் பலர் திறமையில்லாதவர்கள். முன்னாள் அம்னோ குப்பைகளுக்கும், பெர்சத்துவில் சேர்ந்ததால், அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து இனவாதம் பேசிக் கொண்டிருந்தால் மலேசியா பாரு உருவாக வழியே இல்லை.
மக்களாகிய நாங்கள் உங்களுக்குச் சவால் விடுக்கிறோம்- மாற்றத்தைச் செய்து காட்டுங்கள். மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்கு வாக்களித்தோம் . ஆனால், மாற்றத்தைக் கொண்டுவரும் துணிச்சல் ஹரப்பான் அரசாங்கத்துக்கு இல்லை. ஏமாந்து போனேன்.
தெளிதல்: ஜிஇ15 இன்று நடந்தால் ஹரப்பான் தோற்கும். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை.
இருந்தாலும், இன்னும் மூன்றரை ஆண்டுகள் இருப்பதால், பல மாற்றங்களைச் செய்ய முடியும்.
இவான் கே: நாளை ஒரு பொதுத் தேர்தல் வைத்தால் டிஏபி நசுக்கப்படும். அது ஜிஎ14க்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. அதனால் மக்களிடம் பெருகிவரும் வெறுப்புணர்வால் ஆதாயம் பெறப் போவது மசீசவும் மஇகாவுக்கும்தான்.
கடந்த சில மாதங்களில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கும் நல்லிணக்கமும் சிதறிப் போய்விட்டது. நன்றி, ஜாகிர் நாய்க். அவருக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் நன்றி.
மலாய்க்காரர்- அல்லாதார் தங்களுக்குத் தங்கள் தலைவர்கள் துரோகமிழைத்து விட்டதாக நினைக்கிறார்கள். நாடு தங்களைவிட ஒரு வெளிநாட்டவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
டிஎம்ஜிஎஸ்சி: லிம்மின் நன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். ஆனால், உண்மை நிலவரம் வேறு. ஹரப்பான் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை என்றால் ஜிஇ15-இல் வெற்றி எட்டாக்கனியாகி விடும்.
முதலில், ஹரப்பான் பெரியவரை மூட்டை கட்டி அனுப்ப வேண்டும். தேர்தல் அறிக்கையில் அது குறிப்பிட்டிருந்த சீரமைப்புகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கிழவனார் இருந்துகொண்டு கூட்டணிப் பங்காளிகளுக்கு வேட்டு வைத்துக்கொண்டும் அம்னோ 3.0-யை உள்ளுக்குள் கொண்டுவர மறைமுகமாக சூழ்ச்சி செய்துகொண்டும், ஒருமித்த கருத்துகளுக்கு இடமளிக்காமல் தன்மூப்பாக முடிவெடுத்துக்கொண்டும் இருந்தால் ஹரப்பானுக்கும் பழைய பிஎன்னுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது.
மூங்கில்: 2023க்குள் மூன்றாவது சக்தி ஒன்று உருவாக வேண்டும். பிரதமர் டாக்டர் மகாதிர் ஹரப்பானைக் கடத்திச் சென்று விட்டார். டிஏபி மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தவறிவிட்டது.
பிஎன் மீண்டும் ஆட்சிக்கு வராதிருக்க பெர்சத்து-இல்லாத ஒரு புதுக் கூட்டணி தேவை. பெர்சத்துவால்தான் மகாதிருக்குப் பிரதமர் பதவி. பெர்சத்துதான் ஹரப்பான் கூட்டணியில் குறைந்த எண்ணிக்கையில் சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைக் கொண்ட கட்சி. ஆனால், அதற்குத்தான் அமைச்சர்கள், மந்திரி புசார்கள் அதிகம்.
மகாதிரின் சாணக்கியத்தனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மலேசியாவில் உண்மையான சீரமைப்பு என்பது இருக்காது.
பெயரிலி_a01a7b4a: இங்கு இடம்பெறும் கருத்துகளைப் பார்க்கையில் , மகாதிர் 15 மாதங்களில் (மிகவும் விரும்பப்பட்ட மனிதர் என்ற நிலையிலிருந்து) மிகவும் வெறுக்கப்படும் மனிதராகிவிட்டதுபோல் தெரிகிறது. நிலைமைப் புரிந்துகொண்டு விரைவில் அவர் பதவி விலகட்டும்.
மனசாட்சி: லிம், 2018 மே 8க்கு முன்பு, எதிர்கட்சியாக இருந்தபோது எப்படிப்பட்ட துணிச்சலைக் காட்டினீர்களோ அந்தத் துணிச்சல்தான் இப்போது தேவை. சமயப் போதகர் ஜாகிர் நாய்க்குக்கு இவ்வளவு இடம் கொடுக்கப்படுவது ஏன்? அவர் நம் அனைவர்மீது விஷத்தைக் கக்கும் ஒரு நச்சுப் பாம்பு. அவருக்கு ஏன் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்?
மகாதிரை ஒழித்துக் கட்ட வேண்டும். நமக்குத் தேவை நாட்டுக்காகவும் சாதாரண மனிதனுக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய ஓர் உண்மையான மலாய்த் தலைவர். மீண்டும் மகாதிரிசம் கோலோச்ச இடம் கொடுக்கக் கூடாது.
டொக்சமா: லிம், விழித்தெழுந்து விரைந்து செயல்படுவீர். இப்போதைய போக்கே தொடருமானால் உங்கள் கோட்டை என்றழைக்கப்படும் பினாங்குகூட பறிபோகும்.
சிலாங்கூர், பேராக், ஜோகூர் ஆகியவற்றை மறந்து விடலாம். வாக்காளர்கள் தவறு செய்து விட்டார்கள். அதே தவற்றை அவர்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள்.
இதுவரை நீங்கள் செய்தது என்ன? எல்லாவற்றுக்கும் முந்தைய அரசாங்கத்தையே குறை சொல்கிறீர்கள். அது எங்களுக்குத் தெரியாதா. தெரிந்ததால்தானே பிஎன்னை வெளியேற்றினோம்.
அதனால் ஆன பயன்? இனவெறி மிகுந்த அரசாங்கம், ஒற்றுமையைக் கட்டிக்காக்காத அரசாங்கம் அல்லவா வந்து வாய்த்துள்ளது.
அது கொண்டுவந்த எந்தக் கொள்கையும் மக்களால் முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்வதற்கில்லை. அது மட்டுமல்ல அமைச்சர்களும் பல்டி அடிப்பதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
மலேசியன்: கூட்டணியின் பங்காளிக் கட்சியான பெர்சத்துவுக்கு நிலையான கொள்கைகள் இருப்பதாக தெரியவில்லை. பழைய அம்னோவைப்போல் இனத்தையும் சமயத்தையும் காப்பதில்தான் அது குறியாக உள்ளது.
அதற்காக, அம்னோ-பாஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது கொடுங்கோல் Darth Vader-ரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்கு ஒப்பாகும்.
பெயரிலி770241447347646: வேறு என்னதான் வழி? ஹரப்பான் இல்லையென்றால் அம்னோ- பாஸ் கூட்டணிதான். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய நிலைமை திரும்பி வரும். ஊழல், நிர்வாகக்குளறுபடி, பண விரயம் அத்துடன் இனவெறிப் பேச்சுகளும் அதிகரிக்கும்.
ஹரப்பானிடத்தில் எல்லாம் செம்மையாக நடக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஊழல் ஒடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துறைகளும் அரசாங்கச் சார்புத் துறைகளும் நிறுவனங்களும் நேர்மையானவர்களால் நிர்வகிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
ஹரப்பானில் பலர் நியாயமாக, நேர்மையாக நடக்கத்தான் முயல்கிறார்கள். சில தலைவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு நாட்டின் மேம்பாட்டைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஊறிப்போன மனநிலையை மாறுவதற்கு ஒரு பத்தாண்டுக் காலமாவது ஆகும்.