உள்ளூர் ஊடகங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை ஒழுக்கமான மற்றும் பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இன மற்றும் மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் விளையாடக் கூடாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் (எம்.சி.எம்.சி) துணை அமைச்சர் எட்டின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார்.
ஆயினும், வாசகர்கள் செய்தித்தாள்களை வாங்க அல்லது செய்தி தளங்களைப் பார்வையிட, அவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஊடகங்களுக்கு ‘அதிர்ச்சியூட்டும்’ செய்திகள் தேவை என்பதை புரிந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“இதுபோன்ற ஒரு கதையைக் கண்டுபிடிப்பதில், தேசியத் தூண்களான தார்மீக மற்றும் ஒழுக்கநெறிக் கொள்கைகளுக்கு மற்றும் பத்திரிகை நெறிமுறைகளுக்குப் பொருந்த அவர்கள் செயல்பட வேண்டும்.
“இன வெறுப்புத் தீயைத் தூண்டும் நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் ஊடகங்கள் அவ்வாறு செய்வதில்லை என்று நினைக்கிறேன்.
நாட்டில் இனப் பதட்டங்களைத் தணிக்கும் பொருட்டு, இன மற்றும் மதப் பிரச்சினைகளைத் தூண்டும் வகையிலானச் செய்திகளைத் தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமதுவின் அறிக்கை குறித்து கேட்டபோது, செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு வாசகனாக, செய்திகளின் உண்மையான சூழலைப் புரிந்துகொள்ள, எழுதப்பட்ட செய்தியின் முழு உள்ளடக்கத்தையும் வாசித்து, ஆராய்ந்தறிய வேண்டும் என்றும் எட்டின் கூறினார்.
எம்.சி.எம்.சி. உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கான கண்காணிப்பை அதிகரிக்குமா என்று கேட்டதற்கு, அரசாங்கம் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் அவர்.
“இனம், மதம் மற்றும் அரசப் பரம்பரை விஷயங்களில் மட்டுமே அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறது. இவற்றில் விளையாடினால், எம்.சி.எம்.சி. தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும்,” என்றும் அவர் சொன்னார்.