மெர்டெக்கா : நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘மலேசியாவை நேசியுங்கள்: தூய்மையான மலேசியா’ என்றக் கருப்பொருளுடன் அனைத்து மலேசியர்களும் 62-வது தேசிய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் சுதந்திரத் தினத்தையொட்டி தங்கள் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மலேசியாகினி சில செய்திகளை உங்கள் பார்வைக்காக இங்கு ஒன்றிணைத்துள்ளது. அவை பின்வருமாறு:

பி.எச். தலைமை மன்றம்

மலேசியர்கள் இதுவரை அனுபவித்த அமைதி மற்றும் செழுமையைப் பாராட்டும் வகையில், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கும், பொறுத்துக்கொள்வதற்கும், சேவை செய்வதற்கும் தங்களையும் தம் குடும்பத்தாரையும் அண்டை வீட்டாரையும் படிப்பிக்க வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மலேசியர்களைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படியும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

“காலனித்துவ அச்சுறுத்தல்களிலிருந்து 62 ஆண்டுகள் விடுபட்டு இருந்தபோதிலும், எங்கள் அன்புக்குரிய நாடு இன்னும் இன உணர்வுகளுக்கு ஆளாகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

“நடுநிலைக்குத் திரும்புவதைத் தவிர, மலேசியாவிற்கு வேறு வழியில்லை. மேலும், 2018 மே 9 அன்று, பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய இந்நாட்டு மக்களின் தொடர்ச்சியான வெற்றியை, அச்சுறுத்தும் வகையிலான அனைத்து தப்பெண்ணங்களையும் நம்பிக்கைகளையும் நாம் கைவிட வேண்டும்,” என்று அது கூறியுள்ளது.

பாஸ் தலைவர்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், 3 நிமிட வீடியோ பதிவு ஒன்றில், குழந்தைகள் சிலரிடம் சுதந்திரத்தின் அர்த்தத்தை விளக்கினார்.

மலேசியர்கள் மலேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்காப்பு அமைச்சர்

தற்காப்பு அமைச்சர் முஹமட் சாபு தனது செய்தியில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை எல்லா நேரங்களிலும் பராமரிக்கும் இராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தின் மூலம் நாட்டு மக்கள், இவ்வாண்டு தேசியத் தினத்தை அமைதியான முறையில் கொண்டாட முடிகிறது என்று கூறியுள்ளார்.

எனவே, தேசியப் பாதுகாப்புப் படையினரின் சேவைகளையும் தியாகங்களையும் பாராட்டுமாறு மாட் சாபு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“நமது அன்றாட நடவடிக்கைகளில் நாம் சுகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, 13,000-க்கும் மேற்பட்ட மலேசியப் படைவீரர்கள், களத்திலும் நாட்டின் எல்லையிலும் 24 மணி நேரமும் நாட்டின் பாதுகாப்புக்காக வேலை செய்கின்றனர்.

“இந்த தேசிய தினத்தை முன்னிட்டு, அவர்களின் தியாகத்தைப் பாராட்டுவோம்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார விவகார அமைச்சர்

பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலி, சமூகப்-பொருளாதார இடைவெளி காரணமாக மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைத் தொட்டது பேசியுள்ளார்.

“சுதந்திரம் பெற்றதிலிருந்து, வர்க்கங்கள், இனங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையில் இடைவெளிகள் இருந்து வந்துள்ளன. லைசெஸ்-ஃபைர் பொருளாதாரக் கொள்கை இந்த இடைவெளி அதிகரிக்க வழிவகுத்தது.

“இந்த இடைவெளி சமூகப் பொருளாதார சமத்துவமின்மையின் அடையாளமாகக் காணப்படுகிறது. இடைவெளியை நிவர்த்தி செய்ய, உறுதியான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தபோதிலும், முடிவுகள் திருப்திகரமாக இல்லை,” என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர்

ருக்கூன் நெகாராவின் கொள்கைகள் மற்றும் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை, நாட்டிற்கும் அரசருக்கும் விசுவாசம், சகிப்புத்தன்மை மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் பாதைக்கு மலேசியர்கள் திரும்ப வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டார்.

“உலகத் தரம் வாய்ந்த, முன்னேற்றகரமான ஒரு பன்முக தேசத்தை உருவாக்குவதற்கான நம் முயற்சிகளுக்கு அது மிக அவசியம்,” என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர்

நாட்டின் செல்வத்தை அழிக்கும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை மலேசியா தவிர்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.

‘அல்லாஹ்வே, இந்நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் காத்துக்கொள்கிறீர்கள்… இன மோதல்களிலும், மத உறவுகளில் உறுதியற்ற தன்மையிலும் சிக்கிக்கொள்ளாமல் நாட்டைப் பாதுகாத்து வைத்திருங்கள்,” என்று அவர் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் வேளாண் துறைசார்ந்த அமைச்சர்

வேளாண்மை மற்றும் வேளாண் துறை சார்ந்த அமைச்சர் சலாவுடின் ஆயூப், ஒரு வீடியோ செய்தியில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனது அமைச்சின் நிலைபாட்டை மெர்டேக்கா நாளில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“62 ஆண்டுகால சுதந்திர நாடு என்ற வகையில், தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த அமைச்சு தொடர்ந்து உணவுப் பாதுகாப்பைப் பேணும்.

“உணவுப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகும், இது பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. மலேசியர்களுக்கு ஆரோக்கியமான, சத்தான மற்றும் வாங்கக்கூடிய சக்திக்கு உட்பட்ட உணவு கிடைப்பது நமது சுதந்திர உணர்வின் ஒரு பகுதியாகும்,” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தேசியத் தின செய்தியில், நாட்டின் தற்போதைய நிலை குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.

நஜிப்பின் கூற்றுப்படி, நாளுக்கு நாள், நமது நல்லிணக்கம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது.

“நாட்டில் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு சிதைந்து வருவதை என்னால் உணர முடியும்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு முன்னாள், சுதந்திரம் பெற்ற 61 ஆண்டுகளாக, நாட்டின் முதுகெலும்பாக இருந்த ஒற்றுமை எவ்வாறு இன்று இந்த நிலையை அடைந்தது?

“நம்மிடையே இருந்த ‘சத்து மலேசியா’ உணர்வு எங்கே?  ‘நெகாராகூ, செஹாத்தி, செஜீவா’ உணர்வு எங்கே? மலேசியாவுக்குத் தேவையான தலைமைத்துவம் எங்கே?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.