முந்தைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் இப்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்துகொண்டு, பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம், வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேச வேண்டாம் என்று ஆட்சியாளர்கள் எவ்வளவோ வலியுறுத்தியிருந்தாலும் அதை உதாசீனப்படுத்துவதோடு தேசிய ஒற்றுமையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அதை அழிக்கவும் முற்படுவதைக் காண அதிர்ச்சியாக உள்ளது என டிஏபி முத்த தலைவரும் இஸ்கண்டர் புத்ரி எம்பியுமான லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் செயல்களுக்காக வருந்துவதுடன் ஆட்சியாளர்களின் அறிவுரையை மதித்து சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் பொய்ச் செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் தடுக்கவும் பங்காற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆன பின்னரும் இனங்களுக்கிடையேயும் சமயங்களுக்கிடையிலும் வெறுப்பூட்டும் செயல்கள் அடிக்கடி நிகழ்வதைக் காண்கிறோம் என்று கூறியிருப்பதை லிம் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் இழித்துரைத்துக்கும் போக்கு பெருகி வருவதாக சுல்தான் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட செயல்கள் தக்க நேரத்தில் வெடிக்கக் காத்திருக்கும் தருணக் குண்டுகள் என்றவர் எச்சரித்திருப்பதையும் லிம் நினைவுபடுத்தினார்.