சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்மீதான விசாரணை தொடர்பில் அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலக(ஏஜிசி) உத்தரவுக்காகக் காத்திருப்பதாக கூட்டரசு போலீஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
ஜாகிர் நாய்க், இந்திய மலேசியர் பற்றியும் சீன மலேசியர் பற்றியும் தெரிவித்த கருத்துகள் மீது தனித்தனியாக விசாரணை நடத்தியதாக புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் ஹுஸிர் முகம்மட் அந்த அறிக்கையில் கூறினார்.
“ஜாகிர் நாய்க் மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மலேசியப் பிரதமரை ஆதரிப்பதில்லை என்று சொன்னதாகக் கூறப்படுவது பற்றி குற்றவியல் சட்டம் பிரிவு 504-இன்கீழ் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகள் பலரும் அழைக்கப்பட்டு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
“விசாரணை குறித்து ஏஜிசி-க்கு விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போலீஸ் அதன் உத்தரவுக்குக் காத்திருக்கிறது”, என ஹுஸிர் தெரிவித்தார்.