கெப்போங் டிஏபி சீன நாட்டவரைப் பதிவு செய்து அவர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக இணையத்தளத்தில் வலம்வரும் ஒரு காணொளியில் கூறப்பட்டிருப்பதைத் தேசிய பதிவுத்துறை மறுக்கிறது.
அக்காணொளியைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
அக்காணொளியில் “கெப்போங் டிஏபி சட்டவிரோத சீனக் குடியேறிகளைப் பதிவு செய்து அவர்களுக்கு மைகார்ட் பெற்றுத்தரத் திட்டமிடுகிறது. சீனர்கள் என்ன செய்கிறார்கள் பார்த்தீர்களா. மலாய்க்காரர்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற செய்தி இடம்பெற்றிருந்தது.
அக்காணொளியில் காணப்படுவது கடந்த ஆண்டு கெப்போங் டிஏபி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வு என என்ஆர்டி ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
“2018 இறுதியில் கெப்போங் டிஏபி, குடியுரிமை மற்றும் அடையாளக் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் பற்றி விளக்குவதற்காக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
“யாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் அன்று பெறப்படவில்லை. குடியுரிமைக்கும் அடையாளக் கார்டுக்கும் விண்ணப்பம் செய்வோர் அவர்களுக்கு அருகில் உள்ள என்ஆர்டி அலுவலகங்களுக்குச் செல்லுமாறு கூறப்பட்டது.
”பொறுப்பற்றவர்கள் இப்படிப்பட்ட பொய்யான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என என்ஆர்டி நினைவுபடுத்த விரும்புகிறது”, என்றது எச்சரித்தது.