யார் என்ன சொன்னாலும் சரி, ஜாக்கிரை திருப்பி அனுப்ப மாட்டேன் என பிரதமர் துன் மகாதீர் மிகவும் பிடிவாதமாக இருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது, காரணம் அது அவரின் முகமூடியை அகற்றி அவர் இன்னமும் பழைய மகாதீர்தான் என்பதை காட்டியுள்ளது..
இந்நாட்டில் எதனை செய்யக்கூடாது என அரசாங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளதோ, அதே காரியத்தை கடந்த மாதத்தில் மிகத் துணிச்சலாக செய்துள்ள விசமத்தனத்தினால் நாட்டு மக்கள் வீன் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இது இஸ்லாமிய நாடு, இங்கு இந்துக் கோயில்களையும் தேவாலயங்களையும் கட்ட அரசாங்கம் இடம் கொடுத்திருக்கவே கூடாது என 2 ஆண்டுகளுக்கு முன் அதிகப்பிரசங்கித்தனமாக அவர் உளரியிருந்தார். இந்து மதம் என ஒன்று இல்லவே இல்லை, அது இந்தியாவின் புவியியல் அடையாளம் மட்டுமே என்ற ஒரு சர்ச்சையைக் கிளப்பிய அந்த ஆசாமி, முஸ்லிம் அல்லாதாருக்கு வாக்களிக்கக் கூடாது என்றுக்கூட கடந்த பொதுத்தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார். ஊழல்வாதியான நஜிப்புக்கு வாக்களியுங்கள் என்று பேசி எரிச்சலூட்டினார்.
தனது நச்சுத்தன்மையான பேச்சினால் இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துவதில் பலே கில்லாடியான இந்த ஜாக்கிரிடம் மகாதீர் ஏன் மதி மயங்கிக் கிடக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவரிடம் மகாதீர் அப்படி என்ன சிறப்பைக்கண்டார்? அவர் ஒரு மாபெரும் மத போதகர் என்றால் அந்த அளவுக்கு இஸ்லாத்தில் பாண்டியத்துவம் பெற்றவர் உள்நாட்டில் யாரும் இல்லையா? அப்படியென்றால் ஜாக்கிரின் திறமைக்கு இந்த நாடே அடிமையா?
மக்களின் அபிலாசைகளுக்கு செவிசாய்க்காமல் ஜாக்கிர் நாயக் என்ற ஒரு தனிமனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மகாதீர். பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடக்கடி அரசாங்கம் மாறுவதால் ஒவ்வோரு முறையும் மக்கள் மாறுபட்ட ஆட்சியை அனுபவிக்கின்றனர். ஏனென்றால் அந்நாடுகளில் எல்லாம் மக்களின் நலனை முன்னிருத்தி அரசாங்கங்கள் செயல்படுகின்றன. சுயநல அரசியல் அவர்களுடைய அகராதியில் இல்லை. குறிப்பிட்டத் தரப்பினரின் ஆதரவை தொடர்ந்து ஈர்த்து, ஆட்சியை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு மக்களை அவர்கள் பலிகடாவாக்குவதில்லை.
கடந்த 70கள் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் விமானக் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்த காலக்கட்டங்களில் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு லிபியா மட்டுமே தாராளமாக அடைக்களம் கொடுக்கும். இதனால் உலக மக்களின் பார்வையில் நீண்ட நாட்களாக அந்நாடு ஒரு பயங்கரவாத நாடாகவே தென்பட்டது. ஒரு பயங்கரவாதி என உலகின் பல நாடுகளால் முத்திரைக் குத்தப்பட்டுள்ள ஜாக்கிரை தொடர்ந்து நாம் அரவணைத்து ஆரீரோ பாடினால் மலேசியாவுக்கும் அந்த அவலப் பெயர் சூட்டப்படக்கூடிய அபாயம் அருகிலேயே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவது அவசியமாகும்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் நம் நாடு கண்ட ஆட்சி மாற்றத்திற்கு மகாதீரின் பங்கு அளப்பறியது. இதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது. தமது தல்லாத வயதில் பெர்லிஸ் முதல் சபா சரவாக் வரையில் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்து பக்காத்தானின் வெற்றிக்கு வித்திட்டார் அவர்.
அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களின் மிகுந்த அன்புக்குறியத் தலைவராகத் திகழ்ந்த மகாதீரின் செல்வாக்கு கடந்த 2 மாதங்களாக சரிவு காணத் தொடங்கியுள்ளது.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஜாவி பாடத்திட்டம், குவாந்தானில் உள்ள லினாஸ் தொழிற்சாலை மற்றும் ஜாக்கிர் நாயக் விவகாரம், ஆகிய 3 விசயங்களிலும் அவர் செய்துள்ள தன்மூப்பான முடிவுகளினால் மக்கள் மிகுந்த சினமடைந்துள்ளனர். ‘தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள்,’ என்பதைப்போன்று, இதர அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களின் கருத்துக்களையும் அவர் துச்சமென மதிப்பதால் அவருடைய புகழ் படு வீழ்ச்சி கண்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பானில் உள்ள இதர கட்சிகளுடன் தேர்தலுக்கு முன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி 2 ஆண்டுகளில் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரதமர் பதவியை அவர் ஒப்படைப்பாரா என்ற ஐயப்பாடும் தற்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்யவிருப்பதாக கடந்த வாரம் கோடிக் காட்டியிருந்த மகாதீர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது ‘அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை, எனவே இப்போதைக்கு அமைச்சரவையில் அன்வாருக்கு இடமில்லை’ என்று நறுக்கென கூறி மேலும் வெறுப்பைத் தேடிக்கொண்டார்.
மகாதீரின் இந்த முரட்டுத்தனமான பேச்சினால் ஆத்திரமடைந்த துணைப் பிரதமர் டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா, ‘பிரதமர் தமது பதவியிலிருந்து விலகினால் ஒரு இடம் காலியாகும் என்று சற்று காட்டமாகக் கூறி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். வான் அஸிஸா இப்படி கோபப்பட்டு நாம் பார்த்ததில்லை, அவருடைய கருத்து நியாயமான ஒன்றுதான்!
கடந்த 15 மாதங்களாக புதிய மலேசியாவில் நாம் கால் பதித்துள்ள போதிலும், 1981ஆம் ஆண்டு தொடங்கி 22 ஆண்டுகளுக்கு ஒரு சர்வாதிகாரியைப் போல் நாட்டை வழி நடத்திய அதே மகாதீர் தமது சுய ரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
மகாதீரின் இந்த ஆணவப் போக்கினால் மக்கள் சினமடைந்துள்ள போதிலும், ஜாக்கிரை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக தீர்க்கமான ஒரு முடிவை அவர் எடுப்பார் என்று எதிர் பார்க்கின்றனர்.
கடந்த 1987ஆம் ஆண்டில் நாட்டின் முக்கியப் புள்ளிகள் 100 பேரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார். அது எல்லாருக்கும் தெரிந்த ஒரு வெட்ட வெளிச்சம்.
ஆனால் அண்மையில் அது குறித்து விவரித்த அவர், நாட்டின் பாதுகாப்புக் கருதி போலீஸ்தான் அந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது என்று கூறி மிக லாவகமாக நழுவியது ஒரு வேடிக்கை.
இதன் அடிப்படையில் ஜாக்கிரை நாடு கடத்திவிட்டு, பாதுகாப்புக் கருதி போலீஸ்தான் அந்த முடிவை எடுத்தது என்று மகாதீர் சொல்லக்கூடும். பிரதமர் என்ற வகையில் அவர் எம்மாதிரியான முடிவை எப்போது எவ்வகையில் எடுப்பார் என்று யாருக்குமே தெரியாது.
இதுவும் நடக்கவிவ்ல என்றால் ஜாக்கிரின் தலையெழுத்து பிறகு முற்றிலும் இந்தியாவின் கையில்தான். அவரை மீட்பதற்கு இந்தியாவுக்கு நிறையவே வழிகள் உள்ளன என்பது இரு நாடுகளுக்குமே தெரியும்.
இதற்கிடையே அன்வார் இப்ராஹிமும் அரசாயல் சதுரங்கத்தில் தனது காயை மிக கவனமாகவே நகர்த்தி வருகிறார்.
ஜாக்கிர் தொடர்பாக தனது பி.கே.ஆர். கட்சியின் நிர்வாக மன்றம் ஒரு முடிவெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், திடீரென பல்டியடித்து மகாதீரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். மகாதீரை எவ்வகையிலும் அவர் பகைத்துக்கொள்ள விரும்பாததையே இது காட்டுகிறது.
அமைச்சரவையில் அவருக்கு இடமில்லை என மகாதீர் குறிப்பிட்ட போதும் கூட, ‘எனக்கு அவசரமில்லை, நான் காத்திருக்கிறேன்’ என்று மிகவும் அமைதியாக அன்வார் பதிலுரைத்தார்.
இத்தகைய போக்குதான் தற்போது அவருடைய உண்மையான நிலைப்பாடு என்றால், நிச்சயமாக அவர் ‘புதிய அன்வார்’தான். தமது இளமை காலத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பான அபிமின் தலைவராக இருந்த போதும் பிறகு அரசியலில் பிரவேசித்த போதும் அவர் சற்று தீவிரமாகவே செயல்பட்டதை மக்கள் நன்கு அறிவார்கள்.