ஜாகிர் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தடையில்லை-முகைதின்

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அரசாங்கம் தடுக்காது என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.

“அவர் வழிபாடு செய்வதற்கோ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கோ தடையில்லை”, என்று முகைதின் செய்தியாளர்களிடம் கூறினார்.

வரும் சனிக்கிழமை ஜாகிர் மலாக்காவில் கிருபோங் மஸ்ஜித் சீனாவில் சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளப்போவது பற்றி வினவியதற்கு அமைச்சர் அவ்வாறு கூறினார்.

“ஜாகிர் நாய்க் அங்கு பிரார்த்தனையில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் உரையாற்றப்போவதில்லை.

“அதனால்தான் அவர் அந்நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மலாக்கா போலீஸ் தலைவரும் கூறியுள்ளார்”, என்றார் முகைதின்.

கிளந்தானில் ஆகஸ்ட் 3-இல் ஒரு நிகழ்வில் ஜாகிர் மலேசியாவில் உள்ள இந்துக்களையும் சீனர்களையும் சிறுமைப்படுத்திப் பேசினார் என்பதால் அவர்மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடியும்வரை அவர் நாடு முழுக்க உரையாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.