மலேசிய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் தேசிய கூட்டிணைப்பு (என்சிசிஐஎம்) எல்லா மலேசியரும் எல்லா எம்பிகளும் முஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிகும் இயக்கத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் தலைவர் டெர் லியோங் யாப், அப் புறக்கணிப்பு இயக்கம் வெறுப்பைத் தூண்டிவிட்டு ஒற்றுமையைக் கெடுக்கும் என்றார்.
மலேசியர்கள் நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்களும் முஸ்லிம்-அல்லாதாரும் ஒருவர் மற்றவர் தொழில்களுக்கு ஆதரவாக இருப்பதே நல்ல எடுத்துக்காட்டு என்றாரவர்.
என்சிசிஐஎம்-இல் மலேசிய மலாய் வர்த்தக சங்கம், மலேசிய சீனர், வர்த்தக, தொழிலியல் சங்கம்(ஏசிசிசிஐஎம்), மலேசிய இந்தியர் வர்த்தக, தொழிலியல் சங்கச் சம்மேளனம் (மைக்கி), மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழிலியல் சங்கம், மலேசிய பொருள் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் தொடங்கிய இந்தப் புறக்கணிப்பு இயக்கம் பூமிபுத்ராக்களை பூமிபுத்ரா- அல்லாதார் தொழில்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியது.
இப்போது அதில் ஒரு சிறு மாற்றம். “முஸ்லிம் பொருள்களுக்கே முன்னுரிமை” என்ற இயக்கமாக அது மாறியுள்ளது.
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி ஓவிய எழுத்துகளுக்கு சீன, இந்திய தரப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் பதிலுக்குச் சில தரப்பினர் இந்தப் புறக்கணிப்பு இயக்கத்தைத் தொடங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.