‘டிஏபி-பிஎச் தலைவர்கள் இனவெறி கொண்டவர்கள்’ – சான்றுகளுடன் அம்னோ குற்றச்சாட்டு

நாட்டில் இனவெறி பிரச்சனைகளுக்கு, எதிர்க்கட்சியான அம்னோதான் காரணம் எனும் குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதுவதாக அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், டிஏபி-பிஎச் தலைவர்கள்தான் வெறுப்பு மற்றும் இனவாதம் ஆகியவற்றைத் தூண்டிவிடுகின்றனர் என்பதற்கு அதிகமான சான்றுகள் இருப்பதாகவும் அதன் தலைவர் டாக்டர் அஸ்ரஃப் வஜ்டி கூறியுள்ளார்.

டிஏபி தலைவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறி, அவர் முன்வைத்த சில சான்றுகள் :-

  1. மனிதவள அமைச்சர், எம் குலசேகரன் மலாய்க்காரர்களை வந்தேறிகள் என்றும் தமிழர்கள்தான் முதலில் இந்த மண்ணில் குடியேறியவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
  2. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், சீஃபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மீதானத் தாக்குதல், மலாய்-முஸ்லிம்களால் திட்டமிடப்பட்டது எனக் கூறி, இந்துக்களின் கோபத்தைத் தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தி, அடிப்’பின் மரணத்திற்கு வித்திட்டார்.
  3. கணபதி ராவ்வின் குற்றச்சாட்டிற்குப் பிறகு, பிஎச் இந்திய அமைச்சர்கள் இணைந்து, சீஃபீல்ட் ஸ்ரீ மாரியம்மன் கோயில் மீதான தாக்குதலின் போது, போலிசார் தாமதமாக வந்தனர் என்றும், நிலைமையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். இது இந்தியர்களிடையே இனவெறியைத் தூண்டி, மறுநாள் சுமார் 10,000 பேர் கோயில் கூடி நிற்க வழிவகுத்தது.
  4. நிதியமைச்சர், லிம் குவான் எங், அம்னோ-பாஸ் இடையிலான உறவு, மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு எதிரான போர் என்று கூறினார். மேலும், அம்னோ-பாஸ் அரசாங்கம் அமைத்தால், மலாய்க்காரர் அல்லாதவரின் உரிமைகள் பறிக்கப்படும் என்றார்.
  5. ‘டேவான் ரக்யாட்’டின் துணைத் தலைவர் ங்கா கோர் மிங், அம்னோ-பாஸ் ஒத்துழைத்து, 15-வது பொதுத் தேர்தலில் அரசாங்கம் அமைத்தால், ஆப்கானிஸ்தானில் உள்ளதுபோல, தலிபான் அரசாங்கமாக அது அமையும் என்றார்.
  6. சோங் சியேன் ஜென், ங்கா-வின் கூற்றை ஆதரித்து பேசினார்.
  7. மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர், சியூ சோங் சின், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு தேவாலயத்தில், வெள்ளைக்காரத் தீவிரவாதிகளால் நடந்த படுகொலை சம்பவத்தை, அம்னோ-பாஸ் ஒத்துழைப்புடன் ஒப்பீடு செய்து பேசினார்.
  8. குளுவாங் எம்பி வோங் ஸு கீ, மலாய்க்காரர்களை அவமதிப்பது போல், ஜாவி எழுத்தை ஆபாசப் பொருட்களுடன் இணைத்து பேசி, சீனர்களிடையே வெறுப்பைத் தூண்ட முயற்சித்தார்.
  9. வெளிநாட்டினர் கருதுவதைப் போல, மலேசியா ஒரு மிதமான முஸ்லீம் முற்போக்கு நாடு அல்ல. ஏனெனில், இங்கு இந்தியர்களின் மத உரிமைகள் ஒடுக்கப்படுகிறது, மேலும், சுமார் 10,000 கோயில்கள் இங்கு உடைக்கப்பட்டுள்ளன என்ற ஒற்றுமை துறை அமைச்சர் பி வேதமூர்த்தி வெளிநாட்டுப் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்தார். இது பழைய செய்தியாக இருந்தபோதிலும், இதனை மீட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்க மறுக்கும் வேதமூர்த்தியின் ஆணவமும் பொறுப்பற்றத் தன்மையும் இனவெறியைத் தூண்ட வகைசெய்யும்.

 

இவை மட்டுமல்ல, இன, மத வாதத்தைத் தூண்டும் வகையிலான இன்னும் பல அறிக்கைகள், செய்திகள் உள்ளதாகவும் அஸ்ரஃப் வஜ்டி தெரிவித்துள்ளார்.

எனவே, இன தீயைத் தூண்டியவர்களை நீதியின் முன் நிறுத்த, காவல்துறை மற்றும் அட்டர்னி ஜெனரல் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இன வெறியைத் தூண்டுவோரை, மக்கள் நிராகரிக்க வேண்டும். இன வேறுபாடு இருந்தபோதிலும், நமது அன்பான மலேசியாவை, அதன் பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாக்க நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.