முஸ்லீம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமற்ற நடவடிக்கை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“நீங்கள் ‘ஹலால்’ தயாரிப்புகளை விளம்பரப்படுத்த விரும்பினால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், இஸ்லாம் அல்லாதவர் பொருட்களை வாங்க வேண்டாம் என்ற இனப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சாரத்தை நீங்கள் ஊக்குவிக்க விரும்பினால், அது ஆரோக்கியமானதல்ல,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அன்வார் கருத்துப்படி, முஸ்லிம்களாக, நல்ல தயாரிப்புகளை உற்பத்தி செய்வது மற்றும் முஸ்லிம்களுக்கு உதவி செய்வது முக்கியம், ஆனால் அதே நேரத்தில், அது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.
“இருப்பினும், முஸ்லிம்களுக்குத் தேவையானப் பொருட்களும் உள்ளன, ஆனால் அவை, சீனர்களால் தயாரிக்கப்படுகின்றன, அவற்றைப் பயன்படுத்தலாம் (ஹலால்).
“எனவே, பல்லின மக்கள் வாழும் நாட்டில், இதுபோன்ற பிரச்சாரங்கள் ஆரோக்கியமற்றது,’ என்று அவர் மேலும் கூறினார்.
சமீப காலமாக, முஸ்லிம் அல்லாதோரின் பொருட்களைப் புறக்கணிப்பது மற்றும் முஸ்லீம் தயாரிப்புகளை மட்டும் ஆதரிக்கும் பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.