அண்மையில், அம்பாங்கில் நடந்த ஆயுதக் கலவரம் குறித்த விசாரணையில் போலிசாருடன் ஒத்துழைக்க தயாராக உள்ளதாகப் பேராக் மாநிலப் பிகேஆர் தலைவர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் ரிசால்,
கோலாலம்பூர், அம்பாங்கில் உள்ள, ‘ஆல் ஸ்டார்ஸ் அரினா’ விளையாட்டு வளாகத்தில், ஆகஸ்ட் 31, இரவு 9 மணிக்கு நடந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளருமான ஃபர்ஹாஷ் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இருப்பினும், 37 வயதான ஃபர்ஹாஷ், போலீஸ் புகாரைத் தனது சகோதரி சார்பாக செய்ததாக தெரிவித்தார்.
“என் சகோதரியின் பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளப் போதிலும், விசாரணையில் போலிசாருடன் ஒத்துழைக்க நான் தயார்,” என்று, இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
போலிஸ் புகாரில், ஃபர்ஹாஷ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள முகநூல் கணக்கின் உரிமையாளர் என்ற அடிப்படையில் போலிஸ் அவரை அழைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், போலிசாரைச் சந்திப்பாரா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மேலதிக விளக்கத்திற்கு, மலேசியாகினியால் அவரை அணுக முடியவில்லை.
நேற்று, சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபட்ஸில் அஹ்மட், அந்தச் சம்பவத்தில் சுமார் 12 முதல் 14 ஆண்கள் வரை ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.