18வயதில் வாக்களிக்கும் உரிமையை அமல்படுத்த 18-இலிருந்து 24 மாதங்கள் ஆகலாம் -இசி

வாக்களிக்கும் வயதை 18க்குக் குறைக்கும் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்பது 2021 இறுதி வாக்கில்தான் தெரிய வரும் என்கிறார் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன்.

Vote18 திட்டம் என்பது மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டிருப்பதாக அஸ்ஹார் அசிசான் விளக்கினார். வாக்களிப்பு வயது வரம்பை 21-இலிருந்து 18ஆகக் குறைத்தல், வேட்பாளராவதற்கான வயது தகுதியை 21-இலிருந்து 18–க்குக் குறைத்தல், 18வயதானவர்களை இயல்பாகவே வாக்காளராக்குதல் ஆகியவையே அம்மூன்றுமாகும்.

“எல்லாத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே வோட்-18 முழுமையாகவோ தனித் தனித்தனியாகவோ அமலுக்கு வரும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”, என்றவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால் 2023-இல் வாக்காளர் பட்டியலில் 7.8 மில்லியன் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

அதன் மூலமாக 2023-இல் வாக்காளர்களாக பதிவானவர் எண்ணிக்கை 22.7 மில்லியனாக இருக்கும்.

14வது பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 14.9 மில்லியனாக இருந்தது.

-பெர்னாமா