நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் ரயிஸ் யாத்திம், இந்தியாவில் பிறந்தவரான சமயப் போதகர் ஜாகிர் நாய்க்குக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி (பிஆர்) எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
அவரால் கிடைத்த நன்மை என்ன, இங்குள்ள முப்திகளால் கொடுக்க முடியாத எதை அவர் கொடுத்தார் என்பது மக்களுக்கு விளக்கப்படவில்லை என்று ரயிஸ் குறிப்பிட்டார்.
“இங்கு சிலரை இஸ்லாத்துக்கு மதமாற்றினாரே அதற்காகவா, அல்லது மலேசியரிடம் இல்லாத சமய அறிவு அவரிடம் இருக்கிறா? ஒரு திட்டவட்டமான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை”, என்று ரயிஸ் குறிப்பிட்டதாக சினார் ஹரியான் கூறியது.
“அவருக்கு எப்படி பிஆர் தகுதி கிடைத்தது? இங்கு வரும்போது முதலீடுகள் எதையும் கொண்டு வந்தாரா?”, என்றவர் வினவினார்.
ரயிஸ், நேற்று சினார் ஏற்பாடு செய்திருந்த மலேசியாவில் இன ஒற்றுமை என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
ஜாகிர் கடந்த மாதம் கிளந்தானில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சீனர்களையும் இந்தியர்களையும் சிறுமைப்படுத்திப் பேசியது நாட்டில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இச்சர்ச்சைகள் அடங்குவதற்கு ஜாகிர் நாடு கடத்தப்பட வேண்டும் முன்பு கூறியதை ரயிஸ் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
“ஜாகிருக்கு இந்தோனேசியாவில் வரவேற்பில்லை, இந்தியா சென்றால் அவர் வழக்கு விசாரணையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். சவூதி அராபியாவும் அவரை நிராகரித்துள்ளது ஆனால், நாம் அவரை ஏற்றுக்கொண்டிக்கிறோம்.
“ஜாகிர் இங்கிருந்து செல்வதே நாட்டுக்கு நல்லது”, என்றவர் சொன்னார்.