ஜொகூர் மாநிலத்தில் இயங்கும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், 2019-ம் ஆண்டிற்கான மாநில அரசின் மானியம் பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
70 தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, RM 769,000.00, பகிர்ந்து வழங்கப்பட்டதாக, இன்று அவர் தெரிவித்தார்.
அனைத்து மானியமும், பெற்றோர் ஆசிரியர் சங்க (பி.ஐ.பி.ஜி) வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணம் முறையே, மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“2019-ம் ஆண்டிற்கான மானியம் பி.ஐ.பி.ஜி. வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டும் (2020) மானியம் பெற விரும்பும் பள்ளிகளின் பி.ஐ.பி.ஜி.-க்கள், இவ்வாண்டின் கணக்கு வழக்கை முறையாக சமர்ப்பிக்க வேண்டும், அப்பணம் மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்பட்டிருக்க வேண்டும்.
“செலவுக் கணக்கைச் சமர்பிக்கத் தவறும் பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டு மானியம் வழங்கப்படாது,” என்றும் டாக்டர் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பி.ஐ.பி.ஜி. தலைவராகப் பெற்றோர் அல்லாதவர்
இதற்கிடையே, பெற்றோர் அல்லாதவர் பள்ளியின் பி.ஐ.பி.ஜி. தலைவராகப் பொறுப்பேற்று இருப்பது வரவேற்கத்தக்கது அல்ல என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.
“சில பள்ளிகளில் பெற்றோர் அல்லாதவர் பி.ஐ.பி.ஜி. தலைவராக இருக்கிறார்கள், அதுவும் பல ஆண்டுகளாக. முடிந்தவரை இதனை நாம் தவிர்க்க வேண்டும்,
“பி.ஐ.பி.ஜி. தலைவராகப் பதவி வகிக்க, அவர்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரைத் தத்தெடுக்கின்றனர். பெற்றோர்கள் தலைவர் பொறுப்பேற்க நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,” என்றார் அவர்.
இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோரின் அரவணைப்பு தேவை
இடைநிலைப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மீதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும், அடிக்கடி பள்ளிக்குச் சென்று பிள்ளைகளின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் டாக்டர் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
“தமிழ்ப்பள்ளியில் படிக்கும் வரை, பெற்றோர் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்துகின்றனர். ஆசிரியர்களைச் சந்தித்து, பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கின்றனர்.
“ஆனால், அதேப் பிள்ளை, இடைநிலைப்பள்ளி சென்றவுடன், பெற்றோரின் கண்கானிப்பு குறைந்துவிடுகிறது. பல பெற்றோர் இடைநிலைப்பள்ளி பக்கமே போவதில்லை. இதனால், பள்ளியில் பிள்ளைகளின் நிலையை அறிய முடியாமல் போகிறது.
“பெற்றோர் இடைநிலைப்பள்ளிக்கும் சென்று, பிள்ளைகளின் ஆசிரியரைச் சந்தித்து, விவரம் அறிய வேண்டும். இது பிள்ளைகளின் நலனுக்காக மட்டுமல்ல, பெற்றோர்-ஆசிரியர் மத்தியில் சுமூகமான உறவு வளரவும் இது துணைபுரியும்,” என்றார் அவர்.
“இன்றையச் சூழலில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் குறிப்பாக, ஜொகூர் மாநிலத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதால், பல மாணவர்கள் பெற்றோரின், முழுமையான கண்கானிப்பு இல்லாமல் வளருகின்றனர்.
“எதிர்காலத்தில், இவர்கள் வழிதவறிச் செல்ல இதுவும் ஒரு காரணமாக அமைகிறது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்ப்பள்ளிகளில் இருந்து இடைநிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள், அந்தப் புதிய சூழலுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள சில காலம் பிடிக்கும். அந்த நேரத்தில், அவர்களுக்குப் பெற்றோரின் கவனிப்பும் ஆதரவும் மிக அவசியம். அந்தக் காலகட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் பெற்றோர்களுக்கு வலியுறுத்தினார்.