முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!

முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன்  வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக  தொடுத்த ஓர் அவதூறு  வழக்கு,  சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு,  தீர்ப்பு வேதமூர்த்திக்கு சாதகமாக 9.7.2018-ஆம் தேதியன்று   வழங்கப்பட்டது.

கணேசன் ரிம 100,000  நஷ்ட ஈடு கட்ட வேண்டும் என்றும் நீதி மன்றம் ஆணையிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக திரு.கணேசன் மேல் முறையீடு செய்திருந்தார்.

கணேசன்தான் அந்த அவதூறான செய்தியை வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அதை அமைச்சர் வேதா நிருபிக்க தவறி விட்டார் என்று கணேசன் சார்பில் வாதாடப்பட்டது.  இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹமிட் சுல்தான் அபு பேக்கர் கணேசன் அவர்களின் மேல் முறையீட்டை அனுமதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் கணேசனை பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் குர்டியால் சிங் மற்றும் எஸ் திலகவதியும், வேதமூர்த்தியை பிரதிநிதித்து வெங்கடேசனும் வாதிட்டனர்.

இது சார்பாக கருத்துறத்த கணேசன், சனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் மக்களின் அடிப்படை உரிமையாகும், அதை அதிகாரத்தில் உள்ளவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கானது  தமிழ் நேசன் 13.3.2016-இல் வெளியிட்ட ஒரு செய்தியை கணேசன்தான் அவதூறு செய்யும் வகையில் வெளியிட்டார் என்று வேதமூர்த்தியால்  2018 –இல் தொடுக்கப்பட்டது.  இது ஒரு பலிவாங்கும் படலம் என கருதப்பட்டது. இதே போல் கோமலம் என்ற முன்னாள் ஹிண்ராப் சமூக போராளி மீதும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கணேசணும் இன்னும் சில முக்கியமானவர்களும் கருத்து வேறுபாட்டால்  பதிவு செய்யப்பட்ட ஹின்ராப் இயக்கத்தில் இருந்து 2016-இல் விலகினர்.