ஜாகிர் நாயக் பிரச்சினை : மகாதீர், மோடி சந்திப்பு

மலேசியாவில் சர்ச்சைக்குரிய போதகரான டாக்டர் ஜாகிர் நாயக்கின் இருப்பு குறித்து, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று ரஷ்யாவில் நடந்த சந்திப்பின் போது கலந்து பேசினர்.

இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, பணமோசடி மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, புதுடில்லியால் தேடப்பட்டு வரும் ஜாகிரை, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடி மகாதீரிடம் கேட்டுக்கொண்டார்.

“இப்பிரச்சனையில் எங்கள் அதிகாரிகள் தொடர்பில் இருப்பார்கள் என்று இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர், அது எங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை,” என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே கூறினார்.

மகாதீர் மற்றும் மோடியின் சந்திப்பு, ரஷ்யா, விளாடிவோஸ்டோக்கில், கிழக்குப் பொருளாதார உச்சமாநாட்டின் போது நடந்தது.

மே 31-ல், புத்ராஜெயாவில் முதல் சந்திப்புக்குப் பிறகு, இரண்டாவது முறையாக மகாதிர் மற்றும் மோடியின் சந்திப்பு நடந்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று ஜாகிர் கூறினார், இப்போது மலேசியாவில் நிரந்தர குடியிருப்பாளர் (பிஆர்) அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.

மலேசிய முஸ்லீம் சமூகத்தினர், புதுடில்லியால் ஜாகிர் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என்பதால் அவரைத் திருப்பி அனுப்ப வேண்டாமென மகாதீரை வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம், மகாதீர் அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்கள் மற்றும் பி.எச். தலைவர்கள், ஜாகீரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.