மகாதிர் : மலாய்க்காரர்கள் சோம்பேறிகள், பிற இனத்தவரிடம் வேலையை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர்

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, மலாய்க்காரர்கள் இன்னும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள், பிற இனத்தவருக்குத் தங்கள் வேலையை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று கூறினார்.

Chedet.cc வலைப்பதிவு தளத்தில், அண்மையில் வெளியான ஒரு பதிவில், மலாய்க்காரர்கள் வேலை செய்ய விரும்பாததால்தான், மில்லியன் கணக்கான வெளிநாட்டினர் மலேசியாவுக்குப் படையெடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

“அவர்களுக்கும், கடின உழைப்பாளிகளுமான பிற இனத்தவருக்கும் இடையிலான தூரம் அதிகரித்துள்ளது. நடந்தது என்னவென்றால், பணக்காரர்களாக இருந்தவர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழ்மையில் இருந்த மலாய்க்காரர்கள் மேலும் ஏழைகளாகவும் மாறிவிட்டனர். இது விதிக்கப்பட்டுள்ளது, எதுவும் செய்யத் தேவையில்லை.

மலாய்க்காரர்கள் தங்கள் நிலையை உணரவில்லை

“அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மலாய்க்காரர்கள் அறிந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை உணரவில்லை, இன்று வரை அது மலாய்க்காரர்களுக்குத் தெரியாது. அவர்கள் இன்னும் வேலை செய்ய மறுக்கிறார்கள்.

“மலாய்க்காரர்கள் இன்னும் தங்கள் வேலையை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளனர். வெளிநாட்டினர் நம் நாட்டை நிரப்பி வருகின்றனர். ஏழு மில்லியன் வெளிநாட்டினர் இன்று இங்கே இருக்கிறார்கள். அவர்கள் வேலை செய்கிறார்கள். மலாய்க்காரர்களுக்கு என்ன நேரிடும்?” என்று அவர் இன்று எழுதியுள்ளார்.

மலாய்க்காரர்கள் மாற விரும்பாததால், கடந்த காலங்களில் நேர்ந்ததே இனியும் தொடரும். சிலர், மலாய்க்காரர்கள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்று குற்றம் சாட்டுவதாகவும் மகாதிர் தெரிவித்தார்.

“முதலாளிகளா? ஏழைகள், பிறரின் இரக்கப்படுவார்கள் என எதிர்பார்த்து இருப்பவர்கள், முதலாளிகளா,” என்று மகாதிர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், மலாய்க்காரர்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்ற மகாதிர், மற்றவர்களைத் திட்டுவது பிரச்சினையைத் தீர்க்காது என்றும் கூறினார்.

மலாய்க்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும், பெரும்பான்மையான ஏழைகளின் எண்ணிக்கை, குறைந்த எண்ணிக்கையிலான பணக்காரர்களுடன் போட்டியிட முடியாது.

இரப்பர் தோட்டங்களில் ஈயச் சுரங்களில் மலாய்க்காரர் அல்லாதவர்

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே, மலாய்க்காரர்கள் கடினமாக உழைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் விரும்புவதில்லை, அரசாங்கத்துடன் இணைந்து ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றுவதையே அவர்கள் விரும்புகிறார்கள் என மகாதீர் கூறியுள்ளார்.

“ஆங்கிலேயர்கள் இரப்பர் தோட்டங்களையும் ஈயச் சுரங்கங்களையும் திறந்தனர். விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்தத் துறைகளில் மலாய்க்காரர்கள் யாரும் வேலை செய்யவில்லை. அங்குத் தொழிலாளர்களாக இந்தியர்களும் சீனர்களும் இருந்தனர். மளிகைக் கடை வணிகம் மற்றும் பல வகையான கைவினைஞர்கள் அனைவரும் சீனர்கள்.

“மலாய்க்காரர்கள் எங்கே? அவர்கள் தங்கள் நெல் வயல்களில் வேலை செய்தனர், சிலர் மீனவர்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தில் குமாஸ்தாவாக வேலை செய்தனர்.

“அவர்களில் மிகச் சிலரே, உயர்மட்ட அரசு அதிகாரிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும், வழக்கமான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

வியாபாரம் செய்வதையும் உடல் உழைப்புத் தொழிலாளியாகப் பணியாற்றுவதையும், மலாய்க்காரர்கள் இழிவாக நினைக்கின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது என்று மகாதிர் தெரிவித்தார்.