பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் பென்சன் (ஓய்வூதிய) திட்டத்துக்குப் பதிலாக வேறொரு திட்டத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காப்பார் எம்பி அப்துல்லா சானி அப்துல் ஹமிட், அது பொதுச் சேவை ஊழியர்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என்றார்.
“இந்த ஆலோசனை முதலில் முந்தையை பிஎன் நிர்வாகத்தில்தான் முன்வைக்கப்பட்டது என்றாலும், இப்போது (புதிய அரசாங்கத்தில்) இது பற்றிய பேச்சே வந்திருக்கக் கூடாது. அரசாங்கத் திட்டத்திலிருந்து இது அகற்றப்பட வேண்டும்”, என்று அந்த எம்பி ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.
இத் திட்டம் இப்போதைய பொதுச் சேவை ஊழியர்களைப் பாதிக்காது. ஆனால், வருங்கால பணியாளர்களுக்கு நிரந்தர பணி என்பது இருக்காது. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள்.
“இது நம் நேசமிகு மலேசியாவில் உள்ள பொதுச் சேவை ஊழியர்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும்”, என்றாரவர்.
“பென்சன் என்பது அரசு ஊழியர்களின் பணிகளுக்காக வழங்கப்படும் ஒரு நன்றிக்கடன், ஒரு பாராட்டு”, என்று அப்துல்லா கூறினார்.