லிடோ கடற்கரையில் இறந்துகிடந்த மீன்கள் குறித்து விசாரிக்க ஜொகூர் எம்பி உத்தரவு

அண்மையில், ஜொகூர் பாரு லிடோ கடற்கரை மற்றும் சுல்தானா அமினா மருத்துவமனை (எச்.எஸ்.ஏ) நீர் வடிகாலுக்கு அருகில், மீன்கள் இறந்துபோய், குவிந்து கிடந்ததற்கான காரணத்தை விசாரிக்க, மாநிலச் சுற்றுச்சூழல் துறையும் (ஜெ.ஏ.எஸ்.) மாநில மீன்வளத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து, விரைந்து விசாரணை நடத்தி, மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டுமென, மாநில முதல்வர் டாக்டர் சஹ்ருட்டின் ஜமால் அந்த இரண்டு இலாகாக்களையும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 28-ல், லிடோ கடற்கரைக்குப் பிறகு, எச்.எஸ்.ஏ. நீர் பாசனத்துக்க்கு அருகில் நடந்த இந்தச் சம்பவம் இரண்டாவது ஆகும் என்றார் அவர்.

“நீரில் ஆக்ஸிஜன் குறைந்து, அதனால் மீன்கள் இறந்து போயுள்ளன. ஆக்ஸிஜன் குறைந்து போகக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அறிக்கை வழங்குமாறு நான் அந்த இரண்டு இலாகாக்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்,” என இன்று, மூவாரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மீன்களின் மரணத்திற்கு, லிடோ கடற்கரையைச் சுற்றியுள்ளப் பகுதியில் அபிவிருத்தி மற்றும் மண்மீட்புத் திட்டங்கள் காரணமா என்று கேட்டதற்கு, சுற்றுச்சூழல் துறை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் இலாகாவையும், மேம்பாட்டுத் திட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

நேற்று, மீன்கள் இறந்து கிடந்த வீடியோ பதிவு ஒன்று முகநூலில் பரவி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை அடுத்து, மாநில அரசின் நகர நலன் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் தான் சென் சூன், மீன்களின் இறப்புக்கு வானிலை காரணமாக இருக்கலாம். அல்லது, லிடோ கடற்கரை நீரில் நடைபெறும் மண்மீட்பு நடவடிக்கைகளால் வடிகால் அமைப்பு சீர்குலைந்ததாலும் இது நேர்ந்திருக்கலாம் என ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட அந்த இடத்தில், நீரின் ஆக்ஸிஜன் அளவு, ஒரு மில்லியனுக்குச் சுமார் 1.2 பகுதி (பிபிஎம்) பதிவாகியுள்ளது. இது மீன்களின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கும் என முதற்கட்ட கண்டுபிடிப்புகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  • பெர்னாமா