கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள சைம் டர்பி தோட்டங்களில், கால்நடை பண்ணை வைத்திருப்போர், சைம் டர்பி நிறுவனம் தங்களைத் தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைக் கண்டித்து, அந்நிறுவனத்திற்கு எதிராக சுங்கை காப்பார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
கோல சிலாங்கூர் வட்டாரத்தில் 60-க்கும் மேற்பட்ட கால்நடை பண்ணைகள் இருப்பதாகவும், அவை சைம் டர்பி தோட்டத் தொழிலாளர்களால் 3 தலைமுறைகளாக இயங்கி வருகின்றன என்றும் அக்குழுவின் ஆலோசகரான காந்தி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நேற்று காலை போலிஸ் புகார் செய்ய, 30-க்கும் மேற்பட்ட பண்ணை உரிமையாளர்கள் காவல்நிலையம் வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, கால்நடை வளர்ப்பாளர்களில் ஒரு பகுதியினருக்கு சைம் டர்பி நிறுவனம் அறிவிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 15-ம் தேதிக்குள், அவர்கள் அப்பண்ணைகளைக் காலி செய்தாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக பண்ணை உரிமையாளர்களில் ஒருவரான சுரேஸ் தெரிவித்தார்.
இதுநாள் வரை, சைம் டர்பி நிறுவனத்திற்குத் தெரிந்தே, அவர்கள் கால்நடைகளை வளர்த்து வந்ததாகவும் சுரேஸ் சொன்னார்.
“தோட்ட வேலையில், குறைந்த வருமானமே கிடைத்து வந்ததால், நாங்கள் ஆடு – மாடுகளை வளர்க்கத் தொடங்கினோம். இது தோட்ட நிர்வாகத்திற்கும் நன்கு தெரியும். இதுவரை கால்நடைகள் வளர்ப்பதை அவர்கள் தடுத்ததில்லை.
“திடீரென, இப்போது எங்களை முன்னாள் தொழிலாளர்கள் என்றும், நாங்கள் அத்துமீறி இங்கு நுழைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவதும் அர்த்தமுடையதாகத் தெரியவில்லை,” என்றார் சுரேஸ்.
சைம் டர்பி நிறுவனத்திடமிருந்து, தங்கள் பண்ணையையும் கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று காவல்துறையிடம் விண்ணப்பிக்கவே, அந்தப் புகார் என்று சேவியர் சொன்னார்.
“முறையான சட்ட நடவடிக்கை எடுக்காமல், வலுக்கட்டாயமாக எங்கள் பண்ணைகளை உடைக்கவோ அல்லது கால்நடைகளைத் துரத்தவோ, சைம் டர்பி முற்பட்டால், அதிலிருந்து காவல்துறையினர் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் போலிஸ் புகார்.
“நீதிமன்ற உத்தரவு இல்லாமல், கட்டாயமாக எங்களை வெளியேற்றுவது சட்டவிரோதமானது, காவல்துறையினரும் இந்தக் கட்டாய வெளியேற்றத்தில் ஈடுபட முடியாது.
“அதுமட்டுமின்றி, சைம் டர்பி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் சேவியர் கூறினார்.
அண்மையில், கோலா சிலாங்கூரில் உள்ள கால்நடை பண்ணை உரிமையாளர்கள், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை அறிவிப்பு தொடர்பாக சைம் டார்பி தலைமையகத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். விரைவில் அதற்குப் பதிலளிப்பதாக சைம் டர்பி நிர்வாகம் உறுதியளித்ததாக, மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) உறுப்பினருமான காந்தி தெரிவித்தார்.
“சைம் டர்பி நிறுவனம் மற்றும் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் இடையே, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதைக் காவல்துறை உறுதிசெய்ய வேண்டும்.
“மேலும், நீதிமன்ற அறிவிப்பு இல்லாமல் கட்டாயமாக அவர்கள் வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சைம் டர்பி நிறுவனத்திற்குக் காவல்துறை அறிவுறுத்துவது நல்லது,” என்றும் காந்தி தெரிவித்தார்.