கேகேஎம் : அடுத்தாண்டு மார்ச்-ல் ‘வேப்’, எலக்ட்ரோனிக் சிகரெட் கட்டுப்பாட்டு சட்டம் விவாதிக்கப்படும்

மலேசிய சுகாதார அமைச்சு (கேகேஎம்), மார்ச் 2020 நாடாளுமன்ற அமர்வுக்குள் புகையிலை, ‘வேப்’, எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் ‘ஷிஷா’ பயன்பாடு குறித்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்.

சுகாதார அமைச்சர், டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட், பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முழுமையான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான ஆய்வின் இறுதி கட்டத்தில் கே.கே.எம். உள்ளதாக, கூச்சிங்கில், சரவாக் பொது மருத்துவமனையில் இன்று தெரிவித்தார்.

முன்னதாக, சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தலைமையிலான ஒரு சிறப்பு குழு, உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின், புகையிலை கட்டுப்பாடு மற்றும் நிகோடின் கொண்ட புகையிலை பொருட்களை உள்ளடக்கிய வேப் மற்றும் ஷிஷா பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பதின்ம வயதினரிடையே, தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஜுல்கிப்ளி பேசினார்.

“அண்மையக் காலமாக, 13-17 பதின்ம வயதினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2012-ல் 7.9 விழுக்காடாக இருந்த தற்கொலை சம்பவங்கள் 2017-ல், 10 விழுக்காடாக அதிகரித்து வந்துள்ளது,” என்றார் அவர்.

-பெர்னாமா