அகோங் : அனைத்து மலேசியர்களும் நாட்டை உண்மையாக நேசிக்கிறார்கள்

இந்நாட்டின் அனைத்து மக்களும், நீடித்த ஒற்றுமையை உருவாக்க, அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒரே தேசமாக நிற்க வேண்டும்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க, அனைத்து மட்டங்களில் உள்ள மக்களும் தலைவர்களும் பாடுபட வேண்டும், வெறுமனேக் கிடந்து வெற்றிக் கனவு காண முடியாது என்று யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா கூறினார்.

ஒற்றுமைக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு பிரிவினைக் கோட்டையையும் உடைத்தெறிய, உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, தனது அதிகாரப்பூர்வப் பிறந்தநாள் சடங்கின் போது இவ்வாறு உரையாற்றினார்.

இன்று, மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

“உண்மை என்னவென்றால், ஒரு நாட்டில் நிலவும் பிளவுகளையும் வேறுபாடுகளையும் நிர்வகிப்பது எளிதல்ல. ஏனென்றால், ஒவ்வொரு விஷயமும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படும்,” என்று மாமன்னர் கூறினார்.

அதனால்தான், இவ்வாண்டு ஜனவரி 31-ம் தேதி, யாங் டி-பெர்த்துவான் அகோங்-ஆக பதவியேற்றதிலிருந்து, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மலேசியா மக்களுடன் நெருக்கமாக இருக்க முயற்சிப்பதாக அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.

“இதன் மூலம், ஓர் இறையாண்மை மற்றும் சுதந்திர தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதில், ஒவ்வொரு மலேசியருக்கும் பங்கு உண்டு என்பதை நான் அறிந்து கொள்கிறேன்.

“நாம் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு மலேசியரும், இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கிறார்கள்,” என்று அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.

மலேசியர்களுக்கு ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளமும் ஒற்றுமையின் உணர்வும் இருப்பதால், அதனை மேற்கொண்டு வளர்ப்பது மட்டுமே தேவை என்றும், அது அனைத்து தடைகளையும் தாங்கக்கூடிய சக்தியாக மாற முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்ட மன்னராட்சி நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும், ருக்குன் நெகாராவின் கொள்கைகளைக் கடைபிடிக்கவும் அனைத்து மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அழைப்பு விடுத்தார்.

உரையின் இறுதியில், தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கும் தனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த மாமன்னர், நாட்டின் நல்வாழ்வுக்காகப் பங்களித்த அரசு நிர்வாக உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.

-பெர்னாமா