மக்கள் வீட்டுவசதித் திட்டத்தை (பிபிஆர்) நிறுத்துமுன், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் வீட்டுவசதி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கேட்டுக்கொண்டார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான இந்த வீட்டுவசதித் திட்டத்தை, பாரிசானின் முக்கியமான ஆக்கிரமிப்புத் திட்டம் எனக் கூறி, அதனை நிறுத்த முயற்சிக்கும் புத்ராஜெயாவின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பிஎன் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, பிபிஆர் திட்டம் ஏழைகளுக்கும், வசதி குறைந்தோருக்கும் வீடுகள் வாங்க வாய்ப்பு வழங்கியது மட்டுமல்லாமல், அதை விட தூய்மையான ஒரு நோக்கம் இருந்தது.
“அது, நாட்டின் செல்வத்தை, வசதி குறைந்தோருடன் பகிர்ந்துகொள்ளும் திட்டமாகும். ஏனென்றால், அவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு மறைமுகமாகப் பங்களிப்பு செய்கின்றனர்,” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவொன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வீட்டுவசதி திட்டம் (பிபிஎம்) என, பிபிஆர்-க்கு மறுபெயரிடும் திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் (கே.பி.கே.டி) பினாங்கு மாநில அரசு கேட்டுக் கொண்டது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதிலும் பிபிஆர் கட்டுமானத்தை அது தடுத்து நிறுத்தும் என்றும் பி40 மக்கள் வீடு பெறுவதற்கான வாய்ப்புகளை அது பாதிக்கும் என்றும் மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறினார்.
பிபிஆர் நிறுத்தப்பட்டு, பிபிஎம் என மாற்றப்படும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ஜுரைடா கமாருட்டினிடமிருந்து தனக்கு ஒரு கடிதம் வந்ததாக சோவ் கூறினார்.
பொதுவாக, பிபிஆர் வீடுகள் தீபகற்ப மலேசியாவில் RM35,000-க்கும் சபா மற்றும் சரவாக்கில் RM42,000-க்கும், RM150,000 அரசாங்க மானியத்துடன் விற்கப்படுகின்றன.
பினாங்கில், இது பி40 குழுவினருக்கு, ஒரு மாதத்திற்கு RM100 மற்றும் பராமரிப்பு கட்டணமாக RM24-க்கு வாடகைக்கு விடப்படுகிறது.
சோவ்’வின் கூற்றுப்படி, பிபிஎம் வீடுகளின் விலை RM90,000 முதல் RM300,000 வரை ஆகும்.
“நாட்டின் வளத்தைப் பகிர்ந்தளிக்க பிஎன் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது. பிபிஆர் வீட்டுரிமையாளர்கள், குறுகிய காலத்தில் அவ்வீடுகளை அதிக விலைக்கு விற்று, இலாபம் தீட்டுவதைத் தவிர்க்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கு அவர்கள் அந்த வீடுகளை விற்கக்கூடாது என்றும் தடைவிதித்தது,” என்றார் இரஹ்மான்.
பிபிஆர் வீடுகளுக்கு அதிக செலவுகள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் செலவை அரசாங்கமும் தனியார் மேம்பாட்டாளர்களும் பகிர்ந்து கொள்ளலாம்.
“குறைந்த விலையில் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவது போன்ற சமூகத் திட்டங்கள் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனால், அரசாங்கம் இதுபோன்ற திட்டங்களில் இலாபத்தை எதிர்பார்க்க முடியாது,” என்றார்.
இரஹ்மானின் கூற்றுப்படி, பிபிஆர் வீட்டுவசதி திட்டத்தை நிறுத்துவது, நாட்டில் பிபிஆர் வீடுகளின் மிகப்பெரிய பெறுநர்களாக இருக்கும் சபா மக்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“மக்களின் நல்வாழ்வுக்காக, பிபிஆர் திட்டத்தைத் தொடர வேண்டும் என சபா அம்னோ கேட்டுக்கொள்கிறது,” என்றும் அவர் கூறினார்.
-ஃப்ரி மலேசியா டுடே