15-வது பொதுத் தேர்தல் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அரசியலில் நேர்மையான, மிதவாதக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் மாற வேண்டும் என பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், இன, மத அரசியலை நிராகரித்து, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகப்-பொருளாதார அம்சங்களுடனான திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஆகவே, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் : சொந்தத் தேர்தல் உறுதிமொழிகளையே இரத்துசெய்தது, தேர்தல் அறிக்கை ‘வேத நூல்’ அல்ல என்ற வார்த்தைகள், நாட்டின் முக்கியக் கொள்கை முடிவுகளில் பல்வேறு யு-டெர்ன்கள் போன்றவை நிறுத்தப்பட வேண்டும், அவை திரும்ப நடக்கக்கூடாது.
“ஊழல் நிறைந்த பி.என்.-ஐ அகற்றுவதற்கும், மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை அளித்த பி.எச். அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கும் உதவிய அனைத்து துறைகளையும் சேர்ந்த வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து இன, மத மக்களிடமும் நாம் மன்னிப்பு கோர வேண்டும்,” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நெறிமுறையற்ற மற்றும் ஜனநாயக விரோத வழிகளில் விளையாட வேண்டாம் என்றும் அந்த மக்கள் பிரதிநிதி பி.எச். அரசாங்கத்தைக் கேட்டுகொண்டார்.
“மலேசியாவில், நடைமுறையில் உள்ள தாராளமய ஜனநாயகத்தின் அரசியல் என்பது எண்களின் விளையாட்டு. எதிராளியை விட யார் அதிக எண்ணிக்கையைப் பெறுகிறாரோ அவர் தான் வெற்றியாளர்.
“பி.எச். நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருந்தால், பிரதான அரசியலில் மித அடிப்படையிலான பண்பாட்டைக் கடைபிடித்தால், குறுகிய இன மற்றும் மத அரசியலை நிராகரித்தால், அனைத்து மக்களின் சமூகப்-பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தால், அக்கூட்டணியை மக்கள் நம்புவார்கள், அடுத்த பொதுத் தேர்தலிலும் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள்,” என்றார் அவர்.
15-வது பொதுத் தேர்தலில், பி.எச். கூட்டணியை எதிர்ப்பதற்கு, அம்னோ-பாஸ் இடையே அரசியல் ஒத்துழைப்பு உருவாவதைச் சட்டமும் மத்திய அரசியலமைப்பும் தடுக்கவில்லை என்று ஹசான் விளக்கினார்.
“அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு பி.எச்.-க்கு மிகப்பெரிய சவாலாகும். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப, அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு சட்டரீதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை, பி.எச். அவர்களிடையேயான உறவை மதிக்க வேண்டும், அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை வரவேற்க வேண்டும்.
“எனவே, பி.எச். நெறிமுறையற்ற மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமாக விளையாடக்கூடாது. அற்பமான மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்காக அம்னோவைத் தடை செய்ய வேண்டாம். அம்னோவை மீண்டும் கொல்ல விரும்புவது சரியா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலாக, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தாராளமய ஜனநாயக மனப்பான்மையுடன், அம்னோ-பாஸ் அரசியல் ஒத்துழைப்பின் சவாலை வரவேற்கும்படி, ஹசான் பி.எச்.-க்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அம்னோ மற்றும் பாஸ் இடையேயான கூட்டு சாசனம், செப்டம்பர் 14-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கையெழுத்திடப்படவுள்ளது.
அதில் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இருவரும் கையெழுத்திடுவார்கள்.