போலி மைகார்டு விவகாரம் தொடர்பில் அரசு அதிகாரிகள் சோஸ்மாவின்கீழ்க் கைது

சீன நாட்டுக் குடிமகள் ஒருவருக்குப் போலி மைகார்டு கிடைப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின்படி உயர் அதிகாரிகள் உள்பட பல அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹரியான் மெட்ரோ கூறியது.

பாதுகாப்புக் குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012(சோஸ்மா)-இன்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கைதானதன்வழி போலி மைகார்ட் தயாரித்துக் கொடுக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது எனவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

சட்டப்பூர்வமான மைகார்டு வைத்திருந்த சீனப் பெண் மலேசியக் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க பினாங்கு குடிநுழைவுத் துறைக்கு வந்தார். அவரால் தேசிய மொழியில் உரையாட இயலவில்லை.

“பகாசா மலேசியாவில் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. புன்னகை மட்டுமே புரிந்தார்”, என அவ்வட்டாரம் தெரிவித்தது.

இதனால் சந்தேகம்கொண்ட குடிநுழைவுத் துறை போலீசில் புகார் செய்தது.

போலீஸ் புகாரை அடுத்து சிறப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் சில அதிகாரிகள் கைதானார்கள். ஒரு கும்பல் ரிம350,000 மதிப்புள்ள மைகார்டுகளை விற்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆறுக்கு மேற்பட்ட மைகார்டுகளை அது விற்றிருப்பது தெரிய வந்துள்ளது.