டாக்டர் எம் : ஜிஇ15-ல், பி.எச்.-இன் செயல்திறனை மக்கள் தீர்மானிப்பார்கள்

2023-ம் ஆண்டு வாக்கில், 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), அதன் கடந்தகால வெற்றிகளை மீண்டும் கூறி, தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விரும்பினால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இப்போது செய்ய வேண்டியப் பெரிய பணிகள் உள்ளன.

இரண்டாவது முறையாக, மக்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பெறுவது எளிதல்ல என்பதால், வரும் தேர்தலில் பி.எச். அதிகத் தடைகளை எதிர்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முஹமட் கூறினார்.

“கடந்த தேர்தலில், முக்கியப் பிரச்சினை முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக். இருப்பினும், ஜிஇ15-ல், நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது.

“மக்கள் பிஎச்-இன் செயல்திறனைச் சோதிப்பார்கள், அது எளிமையானப் பணியாக இருக்காது.

“பொதுவாக இரண்டாவது முறை, ஒருபோதும் எளிதானதாக இருக்காது,” என்று அவர் கூறினார்.

நேற்று இரவு கோலாலம்பூரில், பெவிலியன் ஷாப்பிங் வளாகத்தில் ‘எம் ஃபார் மலேசியா’ (M For Malaysia) எனும் ஆவணப்பட விழாவில் டாக்டர் மகாதீர் கலந்துகொண்டார்.

டாக்டர் மகாதீரின் கூற்றுப்படி, ‘எம் ஃபார் மலேசியா’, பிஎச்-க்கு இதுவரையிலான போராட்டத்தை நினைவூட்டுவதாக இருக்கும்.

14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) பிரச்சாரத்தில், பிஎன்-ஐ தோற்கடித்து புதிய மலேசியாவை உருவாக்க, பிஎச் மேற்கொண்ட போராட்டத்தின் உண்மை கதை அந்த ஆவணப்படம் என்று அவர் விவரித்தார்.

“புகழப்படும்போது மகிழ்ச்சியடைவதைப் போலவே, விமர்சனங்களின் போது நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை இது அனைவருக்கும் கற்பிக்கிறது,” என்று அவர் கூறினார்.

அந்த 90 நிமிட ஆவணப்படம், 61 ஆண்டுகால பி.என்.-ஐ தூக்கியெறிந்த பின்னர், டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராக, இரண்டாவது முறையாக எவ்வாறு திரும்பி வந்தார் என்பது பற்றி கூறுகிறது.