அவரவர் போக்கில் ஜொகூர் பி.எச்., முன்னாள் பி.கே.ஆர் தலைவர் வருத்தம்

பாரிசன் நேஷனல் கூட்டணியைத் தூக்கியெறிய முயன்றபோது, ஜொகூர் பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்த வலு, இப்போது இல்லை என்று ஜொகூர் பி.கே.ஆர்.-இன் முன்னாள் தலைவர் ஹசான் அப்துல் கரீம் தெரிவித்தார்.

மலாய் மையத் தொகுதிகளில் ஒன்றான, பி.என்.-இன் கோட்டையான ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பின்னர், பி.கே.ஆர், பெர்சத்து, டிஏபி மற்றும் அமானா ஆகிய பி.எச்.-ன் நான்குக் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒன்றிணைந்து நடத்தியதில்லை என்று ஹசான் கூறினார்.

“எல்லோரும், அவரவர் சொந்த விஷயங்களில் மூழ்கிவிட்டனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜொகூரில் அக்கூட்டணியை அமைத்தவர்களில் ஒருவர் எனும் வகையில், பி.எச்.-ஐ நேசிப்பதால், இந்த வெளிப்படையான கண்டனத்தை அந்தப் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பி.எச். கூட்டணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் காரணமாகவே, கடந்தப் பொதுத் தேர்தலில், பி.என் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் 26 நாடாளுமன்ற இடங்களில் 18 இடங்களை வென்றெடுக்கவும் முடிந்தது என்றும் அவர் சொன்னார்.

55 சட்டமன்றங்களில், 39 இடங்களைக் கைப்பற்றி, பி.எச். மாநில அரசாங்கத்தை அமைத்தது. ஜொகூர் பி.எச்.-க்குப் பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் தலைமையேற்றுள்ளார்.