பேராக் டிஏபியில் விரிசல், ங்கா பதவி விலக வேண்டும்

பேராக் டிஏபி தலைவர் ங்கா கோர் மிங் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையினால், அக்கட்சியின் தலைவர்கள் இருவர் கட்சியில் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பேராக் டிஏபியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் துணைப் பொருளாளர் லியோங் ச்சியோக் கெங்கிற்கும் உதவிச் செயலாளர் லியோ தை யே-க்கும் இடையிலான அந்தச் சிறிய தகராறு, கட்சிக்குள் தீர்க்கப்படும் என்றும், அச்சர்ச்சைக்குத் தான் பொறுப்பேற்பதாகவும் ங்கா கூறினார்.

“அக்கறை காட்டிய அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம், இது கட்சி விவகாரம். நாங்களே அதனைத் தீர்த்துகொள்கிறோம்,” என்று அவர் கூறியதாக சின் ச்சியு டெய்லி மேற்கோள்காட்டியுள்ளது.

நேற்று நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில், பால் யோங் ஆட்சிமன்ற உறுப்பினராக இருப்பது குறித்த இறுதி முடிவை, பேராக் பிஎச் எடுக்கும் என்று, பேராக் டிஏபி-யுடன் கலந்தாலோசிக்காமல் ங்கா தன்னிச்சையாகக் கூறியது தொடர்பில் லியோங் மற்றும் லியோ இருவரும் அவர்மீது குற்றஞ்சாட்டினர்.

மாலிம் மாவார் சட்டமன்ற உறுப்பினரான லியோங், யோங்’கின் வழக்கறிஞரும் ஆவார்.

பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை காரணமாக யோங் தற்போது விடுமுறையில் உள்ளார்.

இதற்கிடையே, லியோங் மற்றும் லியோ இருவரும் அடிப்படையற்றக் குற்றச்சாட்டை ங்கா மீது சுமத்தியுள்ளனர் என்று பேராக் டிஏபி செயலவை, இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

விரைவில், பிஎச் இது தொடர்பாக கலந்துபேசி, சரியான தருணத்தில், முடிவை அறிவிக்கும் என ங்கா தெரிவித்தார்.