காலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பேரரசியாரைச் சமூக ஊடகத்தில் அவதூறு பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த காலிட் இஸ்மாத், 1948 தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்), மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, இரவு 10.40 மணியளவில், காலிட் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி, அரசியல் இயல்புடையதாகக் கூறப்படும் இக்குற்றத்திற்காக, இரவு கைது செய்யப்படுவது காவல்துறையினரால் ‘மிரட்டப்படுவதற்கு’ ஒப்பானது என்றார்.

இதற்கு முன்னதான, எந்தவொரு போலிஸ் விசாரணையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கி வந்திருக்கும் காலிட்டை, விசாரணை அதிகாரி இரவில் தடுத்து வைத்திருப்பது அபத்தமானது என்று சிவன் கூறினார்.

“வளங்கள் குறைவாக இருப்பதனால், அதிகமான வேலைபளுவில் காவல்துறை இருப்பதாகக் கூறப்படும் வேளையில், இதுபோன்றவற்றுக்கு ஏன் வீணாக நேரத்தைச் செலவிட வேண்டும்?

“பேரரசியாரும் இந்தக் கைது தொடர்பில், தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

“எனவே, காவல்துறை காலிட்டை மேலும் தடுத்து வைக்காமல், நிபுணத்துவத்துடன் விசாரணை நடத்தி, அவரை விடுவிக்க வேண்டும்,” என சிவன் வலியுறுத்தியுள்ளார்.

பிஎச் மீண்டும் யு-டெர்ன் , அம்னெஸ்தி கண்டனம்

1948-ஆம் ஆண்டு தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், காலிட் இஸ்மத் கைது செய்யப்பட்டுள்ளதை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியாவும் விமர்சித்துள்ளது.

“பிஎச் அரசாங்கம் தேசத் துரோகச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளது. எனினும், இச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.

“நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் தேக்கநிலையையே இது குறிக்கிறது.

“தேசத் துரோகச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை வாக்குறுதிகள் அளித்த போதிலும், பிஎச் தனது வார்த்தையை நிறைவேற்றத் தவறிவிட்டது,” என்று அம்னஸ்டியின் நிர்வாக இயக்குநர் ஷாமினி தர்ஷினி காளிமுத்து ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டேவான் ராக்யாட்டில், தேசத் துரோகச் சட்டத்தை இரத்து செய்வதற்காக அளித்த வாக்குறுதியைப் புத்ராஜெயா பின்பற்ற வேண்டும் என்று ஷாமினி கூறினார்.

“அதுமட்டுமின்றி, இந்த அடக்குமுறை சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாகவும் நிபந்தனைமின்றியும் கைவிடுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

காலிட்டை உடனடியாக விடுதலை செய்யுங்கள், பிஎச் எம்பி ஹசான் கரீம்

இதற்கிடையே, பி.எஸ்.எம். உறுப்பினர் காலிட் இஸ்மத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனப் பக்காத்தான் ஹராப்பான் எம்பி ஹசான் கரீம், காவல்துறை தலைவரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

1948 தேசத் துரோகச் சட்டத்தை அகற்றுவதாக பிஎச் அரசாங்கம் உறுதியளித்துள்ளது என அந்தப் பாசீர் கூடாங் எம்பி சொன்னார்.

“இரத்து செய்தல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், தேசத்துரோகச் சட்டம் இடைநிறுத்தம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

“பிரதமரும் (டாக்டர் மகாதீர்) உள்துறை அமைச்சரும் (முஹைதீன் யாசின்) உறுதியளித்தபடி செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரவு நேரக் கைது தேவையற்றது , பிஎஸ்எம் துணைத் தலைவர்

நேற்றிரவு, புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 3 காவலர்கள், காலிட்டைக் கைது செய்ததோடு, அவரின் கைப்பேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

“இரவு நேரத்தில், அவர்கள் அவரைக் கைது செய்திருப்பது நகைப்புக்குரியது. அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, அவர்கள் அவரை இன்று காலையில் அழைத்திருக்கலாம். இது தேவையற்றது,” என பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் தன் பேர் வெளியானதைத் தொடர்ந்து, பேரரசியாரைப் பற்றி தான் டுவீட் செய்யவில்லை என மறுத்த ஒரு நாள் கழித்து காலிட் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டில், ஜொகூர் அரசப் பரம்பரைக் குறித்த தனது பேஸ்புக் இடுகைகளுக்காக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ், 11 குற்றச்சாட்டுக்களும் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளுக்காகவும் காலித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், அந்த வழக்குகள் பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.