தம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை எடுத்ததை எண்ணி பேரரசியார் வருத்தம்

ராஜா பெர்மைசூரி ஆகோங் துங்கு அசிசா அமினா இஸ்கண்டரியா, தம்மைக் குறை சொன்னவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை அறிந்து வருத்தம் கொண்டிருகிறார். போலீஸ் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தமக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்டவர்கள் சிலரைப் போலீஸ் கைது செய்ததை அடுத்து பேரரசியார் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

”நான் டிவிட்டரில் பதிவிடுவதை நிறுத்தி வைத்திருந்தேன், எனக்கெதிராகக் கருத்துகள் பதிவிடப்பட்டதற்காக அல்ல, வேறு பல காரணங்களுக்காக.

“ஆனால், இன்று (எனக்கு எதிராக) பதிவிட்டவர்களை போலீஸ் கைது செய்திருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். இத்தனை ஆண்டுகளில் என் கணவர் பற்றியும் என்னைப் பற்றியும் எவ்வளவோ குறை சொல்லப்பட்டிருக்கிறது. நாங்கள் போலீசில் புகார் செய்ததே இல்லை……இது சுதந்திர நாடு”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

துங்கு அசிசா அவருக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால்தான் டிவிட்டர் கணக்கை மூடிவிட்டார் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது போலீஸ் கவனத்துக்கு வந்து அவர்களும் நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.

இதைப் பேரரசியார் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய கருத்துகளால் ஆத்திரப்பட்டு டிவிடிட்டர் கணக்கை மூடவில்லை என்பதைக் காண்பிக்க டிவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.

“எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசுக்குத் தெரிவிக்கும்படி அரண்மனை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்”, என்றாரவர்.

இதனிடையே பேரரசர் தம்பதியரை, சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் காலிட் இஸ்மாத்மீது 1948-ஆம் ஆண்டு, தேசத் துரோகச் சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ், போலீசார் விசாரணையைத் தொடக்கி இருப்பதாக தெரிகிறது.