அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) உயர் பதவிகளுக்கு அம்னோ உறுப்பினர்களை நியமிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎல்சி நிறுவனங்கள் மலாய் சமூகத்துக்கு உதவி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என பொருளாதாரம் மீதான தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பேராக் பேராளர் இட்ரிஸ் ஹஷிம் கூறினார்.
“நாட்டை ஆளும் மலாய்க்காரர்களுக்கும் கட்சிக்கும் உதவுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றால் ஜிஎல்சி நிறுவனங்கள் இருப்பதால் என்ன நன்மை?”
“இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஒரே ஒரு ஜிஎல்சி மட்டுமே கண்காட்சியில் பங்கு கொண்டுள்ளது. மற்ற ஜிஎல்சி-க்கள் எங்கே போய் விட்டன?”
“நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் அது மற்றவர்களைக் காயப்படுத்தி விடக் கூடும். என்றாலும் ஜிஎல்சி நிறுவனங்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உதவக் கூடாதா?” என அவர் வினவினார்.
நஜிப்பை பின்பற்றுங்கள்
இதனிடையே டிவிட்டர், முகநூல் வழியாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்ளும் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றுமாறு கட்சித் தலைவர்களை புத்ரி பேராளர் வான் சால்வாத்தி அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
மக்கள் தொகையில் 52 விழுக்காட்டினர் இளைஞர்கள் ஆவர். அவர்கள் சமூக கட்டமைப்பு இணையத் தளங்கள் வழியாக தொடர்பு கொள்ள நிறைய நேரத்தைச் செலவு செய்வதாக அவர் சொன்னார்.
இளைஞர்களைக் கவருவது முக்கியமாகும். இல்லை என்றால் அவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அதிபராக அமெரிக்கா தேர்வு செய்தது போன்ற பண்புகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்குவர் என்றார் அவர்.
“நமது மக்கள் தொகையில் எட்டு மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் ஐந்து மில்லியன் மக்கள் மட்டுமே பதிந்து கொண்டுள்ளனர். எஞ்சியுள்ள அந்த மூன்று மில்லியன் மக்களும் பதிந்து கொண்டால் அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அப்போது வடிவமைப்பே மாறி விடும்,” என்றார் வான் சால்வாத்தி.
பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவை ரத்துச் செய்யும் யோசனை பற்றிக் கருத்துரைத்த அவர், அம்னோ பல்கலைக்கழக மாணவர்களுடன் அணுக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அது வழி வகுக்கும் என்றார். அதன் மூலம் பக்காத்தான் ராக்யாட் அவர்களிடம் செல்வாக்குப் பெறுவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.