இம்மாதம் 22-ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி, கிள்ளான் கிளை, வெத்தரன் ஹைலண்ட்ஸ் காற்பந்தாட்டக் குழுவுடன் இணைந்து பி.வீரசேனன் காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி காலை 7.30 மணிக்கு, கிள்ளான் பாடாங் ஜெயா திடலில் தொடங்கும்.
கடந்த 24 வருடங்களாக இப்போட்டியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக, அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
1940-களில் நிகழ்ந்த சுதந்திர மற்றும் தொழிலாளர் வர்க்கப் போராட்ட சரித்திரத்தை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்றாகவும், அக்காலகட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களில் விவேகமாக ஈடுபட்ட தோழர் பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி இருவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்து வருவதாக அவர் சொன்னார்.
“62 வருடங்களுக்கு முன்னமே, பிரிட்டிஷ்சாரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தும், இன்றுவரை நமது சரித்திரம் காலனித்துவக் கதைகளை ஒட்டியே இருந்து வருகிறது. பி.வீரசேனன் மற்றும் எஸ்.ஏ.கணபதி, ஆகிய இரண்டு போராளிகளையும் பிரிட்டிஸ்காரர்கள் தீவிரவாதிகள், குற்றவாளிகள் என்றனர்.
“ஆனால் உண்மையில், பி.வீரசேனன், 1940-களில் இருந்த தேசியத் தொழிற்சங்கமான, பான் மலாயா தொழிற்சங்கச் சம்மேளனத்தின் (பி.எம்.எவ்.தி.யூ) (Pan Malayan Federation of Trade Union {PMFTU]) துணைத் தலைவர் ஆவார். எஸ்.ஏ. கணபதி அதன் தலைவராவார். இவர்கள் இருவரும், நாடு முழுவதும் தொழிற்சங்கங்களை உருவாக்கி, அவற்றைப் பி.எம்.எவ்.தி.யூ. குடையின் கீழ் ஒன்றிணைத்தனர்.
“இந்தத் தொழிற்சங்கம், “பாட்டாளி முரசு” என்றத் தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டு, அதன் மூலமாக தொழிலாளர்களுக்குச் செய்திகளைப் பரப்பி, அவர்களிடையேப் போராட்ட உணர்வைத் தூண்டிவிட்டனர்.
“அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க, அவர்கள் தலைமையில் இயங்கியத் தொழிற்சங்கம் பல முக்கியப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடியது – 8 மணி நேர வேலை, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி, சம்பள உயர்வு என இன்னும் பல,” என அவ்விரு தொழிற்சங்கப் போராளிகளின் வரலாற்றை நமக்கு நினைவூட்டினார் சிவராஜன்.
“தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் எனக் கோரி, மலாயா முழுதும் பல வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பல்லினத்தைச் சேர்ந்த 400 000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களின் போராட்டங்களைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயந்து போயினர்.
“அந்தப் பயத்தின் விளைவு, தொழிற்சங்க ஒன்றுமையையும் பலத்தையும் உடைக்க திட்டமிட்ட பிரிட்டிஷ்சார், சுங்கை சிப்புட், பேராக்கில் கமுனிசவாதிகள் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் கொன்று விட்டதாகக் காரணம் காட்டி, ஜூன் 20, 1948-ல் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர்.
“அப்போது பிரிட்டிஷ், தொழிற்சங்கவாதிகளிடம் வன்முறையைக் காட்டியது, பி.எம்.எவ்.தி.யூ. மற்றும் பொதுத் தொழிற்சங்களைக் (ஜி.எல்.யூ.) கலைத்தது. அதே இரவில், பி.எம்.எவ்.தி.யூ. மற்றும் ஜி.எல்.யூ. அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்த பிரிட்டிஷ்சார், 20 000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்ததாக நம்பப்படுகிறது.
“இந்த நடவடிக்கையின் போதுதான், எஸ்.ஏ கணபதியும் கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர், புடு சிறையில் தூக்கிலிடப்பட்டார். மேலும், 22 வயதே ஆன பி.வீரசேனன் மே 3, 1949-ல் பிரிட்டீசாரால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
“எனவே இந்த முக்கியமான வரலாற்றை நினைவுகூரும் வகையில், நாங்கள் 1993-லிருந்து பி.வீரசேனன் காற்பந்து விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சரித்திரத்தை மக்களுக்குக் கொண்டு செல்கிறோம்,” என்று சிவராஜன் விளக்கமளித்தார்.
“முக்கியமாக, இவர்கள் இருவரும் பிரிட்டிஸ்காரர்கள் சித்தரித்தது போல, தீவிரவாதிகள் அல்ல, தொழிலாளர் நலனுக்காகப் போராடிய வீரர்கள் என்பதை இளைய சமூகம் உணர வேண்டும்,” என அவர் மேலும் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, விளையாடுவதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் மேலோங்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்காகவே, இந்தக் காற்பந்து போட்டியைக் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் பி.எஸ்.எம். கிள்ளான் கிளையின் செயலாளர் சிவரஞ்சனி மாணிக்கம் தெரிவித்தார்.
“20 வயதுகளில் இருந்த அவர்கள் இருவரால், தொலைத் தொடர்பு வசதிகள் அற்ற அந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒரு போராட்டத்திற்காகத் திரட்ட முடிந்தது.
“ஒவ்வொரு மே 1, தொழிலாளர் தினத்தன்றும் (1946, 1947 மற்றும் 1948) பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்களின் உரிமைக்காகப் போராடி, கோரிக்கைகளை முன்வைத்தனர்.
“ஆனால், அனைத்து வசதிகளும் உள்ள இந்தக் காலகட்டத்தில் நம்மால் 100-லிருந்து 200 தொழிலாளர்களை மட்டுமே ஒன்றிணைக்க முடிகிறது. இதற்குக் காரணம், தொழிலாளர் வர்க்கத்தினரிடையே விழிப்புணர்வு குறைந்து வருவதே.
“1948-ல் தொழிற்சங்கத்தில் 60 விழுக்காடு உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், இப்போது வெறும் 6 விழுக்காட்டினரே உள்ளனர். தொழிலாளர் நலனுக்காக நாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முதலாளிகளும் அரசாங்கமும் செவிசாய்க்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
“எனவே, இந்த இரு தொழிற்சங்கப் போராளிகளின் போராட்ட வரலாற்றை நாம் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்,” என பி.எஸ்.எம். தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சிவரஞ்சனி தெரிவித்தார்.
தற்போது 16 குழுக்கள் போட்டியில் பங்கெடுக்க பதிந்துள்ளதாக இணை ஏற்பாட்டு குழுவின் தலைவர் செல்வம் தெரிவித்தார். மேலும், அதில் பல்லினங்களைச் சேர்ந்த குழுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
வெற்றி பெறும் குழுவிற்குச் சுழற்கிண்ணத்தோடு, பரிசுகளும் வழங்கப்படும் என்ற பி.எஸ்.எம். கிள்ளான் கிளைத் தலைவர் இராமா, இந்தப் போட்டி விளையாட்டிற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்று தெரிவித்தார்.