அம்னோ கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சியை இழக்காதிருந்தால் அதுவும் பாஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைக்கும் நிலையே ஏற்பட்டிருக்காது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லோக்.
முன்பு அம்னோ ஆட்சியில் இருந்தபோது அது தன்னை ஓரங்கட்டுவதிலேயே குறியாக உள்ளது என்று புலம்பிக்கொண்டிருந்த கட்சிதான் பாஸ், இப்போது அது அம்னோவுடன் கைகோத்துக் கொண்டிருக்கிறது என்றாரவர்.
“அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான இந்த ஒத்துழைப்பு திட்டவட்டமாக அரசியல் நோக்கம் கொண்டதுதான். அவை நிலைத்திருக்கவும் பக்கத்தான் ஹராப்பானுக்குச் சவாலாக இருக்கவும் இது ஒன்றுதான் வழி என்பதை நாங்கள் அறிவோம். அதை எதிர்பார்க்கவும் செய்தோம்.
“….இது அம்னோவும் பாஸும் பிழைத்திருப்பதற்கான ஒரு யுக்தி. அம்னோவும் இப்போது அதிகாரத்தில் இல்லை. இருந்திருந்தால் பாஸுடன் ஒத்துழைப்பது பற்றி அது நினைத்துக்கூட பார்த்திருக்காது”, என்றாரவர்.