இராகவன் கருப்பையா – அடையாள அட்டைகளையோ (Identity Card), பிறப்புப் பத்திரங்களையோ (Birth Certificate) முதல் முறையாக நம் பிள்ளைகளுக்கு எடுக்கும் போது, அல்லது பிற்காலத்தில் அவற்றை நாம் புதுப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அப்பத்திரங்களில் சமயத்தை ‘இந்து’ என்று குறிக்கப்பட வேண்டிய இடங்களில் ‘தகவல் கிடைக்கவில்லை’ என்று அச்சிடப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்களில் சிலர் புகாரளித்துள்ளனர்.
கடந்த வாரம் தமது மனைவிக்கும் 28 வயதிற்கும் மேற்பட்ட 3 பிள்ளைகளுக்கும் பிறப்புப் பத்திரங்களை புதுப்பிக்கச் சென்ற, கோலசிலாங்கூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தமிழ்தாசனுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டது.
“இது போன்ற நிலை நிறைய பேர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஏற்கெனவே நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நானே இப்போது பாதிக்கப்படும் போது பெரும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது,” என்கிறார் பணி ஓய்வுபெற்ற அந்த ஆசிரியர்.
“கோலசிலாங்கூர் மாவட்ட பதிவு இலாகாவில் அப்பத்திரங்களை பெற்றுக் கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போதுதான், ‘Agama'(சமயம்) என்ற பகுதியில் ‘Maklumat Tidak Diperolehi'(விவரம் கிடைக்கவில்லை) என்று அச்சிடப்பட்டிருந்ததை கவனித்தேன்.”
“அவர்களிடம் விளக்கம் கேட்டும் தக்க பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து வினவிய போது, ‘Itu sistem, kita tak boleh buat apa-apa'(அது கணினியின் செயல்பாடு, நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை), என்ற பொறுப்பற்ற பதிலே வந்தது.”
“அதனை திருத்தியமைக்க அவர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் கணினியின் மீது பழியைப் போட்டு அலச்சியமாக இருந்தது அதைவிட பேரதிர்ச்சி.”
“இவ்விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக புதிய பெற்றோர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும்,” என தமிழ்தாசன் மேலும் கூறினர்.
நம் சமூகத்தினரிடையே இத்தகைய புகார்கள் நிறைய உள்ளதால் ம.இ.கா. தலைவர்கள் அரசாங்கத்திடம் இதனை நேரடியாக எடுத்துச் செல்லவேண்டும் என அவர் கருத்துத் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவிலாகாவிற்கும் உள்துறையமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனுக்கும் மின்னஞ்சல் வழி அதிகாரப்பூர்வ புகாரையும் அவர் பதிவு செய்துள்ளார்.
சமயத்தை முன்னிருத்தி அரசியல் ஆதாயம் காணும் சில மலாய்க்கார அரசியல்வாதிகள், ‘Islam di ancam,'(இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல்), எனும் அடிப்படையில் நார்ப்புறங்களுக்கு அப்பால் உள்ள சாமானிய மக்களை வசீகரப்படுத்த முயல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் தற்பொழுது ‘இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்,’ எனும் யதார்த்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது.
அமைச்சர் சைஃபுடின் உடனடியாக களமிறங்கி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும், முறையான விளக்கமளிக்க வேண்டும்.
இல்லையேல் நம் நாட்டு இந்துக்களிடையே இவ்விவகாரம் பூதாகரமாகி தேவையில்லாத ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இனிமேலாவது வீருகொண்டெழுந்து இது போன்ற விவகாரங்களில் ஆழமாக குரல் கொடுக்க வேண்டும்.
























