சினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள் உண்டு- நிபுணர்

நாட்டில் சினமூட்டும் தகவல்களையோ பயங்கரவாதத்தைத் தூண்டும் தகவல்களையோ கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன என்கிறார் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர்.

நடப்பில் உள்ள குற்றவியல் தடுப்புச் சட்டம் (பொக்கா), 2015 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை சட்டம் 2012(சோஸ்மா), 1998 தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு எந்தவொரு நெருக்கடியையும் ஒடுக்கிவிடலாம் என்கிறார் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் நூர் நிர்வாண்டி.

“நாடு நல்ல தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளதை யாவரும் அறிவர். மற்ற வழிமுறைகள் பலனளிக்காதபோதுதான் கடைசிபட்சமாக சமூக ஊடகங்களை முடக்கிப்போடும் நடவடிக்கையைக் கையில் எடுக்க வேண்டும்”, என்றாரவர்.

சுயேச்சை ஆய்வு நிறுவனமான இப்ஸோஸ் குளோபல் அட்வைசர் மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட மலேசியரில் பலர், நெருக்கடிக் காலங்களில் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களை முடக்கிப் போட வேண்டும் என்று கூறியிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது நூர் நிர்வாண்டி அவ்வாறு கூறினார்.