மலேசியாவில் வங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையை விசாரிக்க மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், மலேசியாவில், 393 வங்காளதேசத் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக, டாக்காவைச் சேர்ந்த காலர் காந்தோ மற்றும் மலேசியாகினி –இன் சிறப்பு அறிக்கையைத் தொடர்ந்து பி.எஸ்.எம். இதனை வலியுறுத்துயுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர், மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் அவர்கள் இறந்துள்ளனர்.
“இந்த மரணத்திற்கான காரணம் என்ன? மலேசியா, இளம் தொழிலாளர்களுக்கு ஒரு ‘கொலை களமாக’ மாறியுள்ளது, நாம்தான் இதற்குப் பொறுப்பேற்று உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்,” என்று பிஎஸ்எம் மத்தியச் செயலவை உறுப்பினர் ஆர் இராணி கூறினார்.
“மரணத்திற்கான முக்கியக் காரணங்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு என்று இறப்பு சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ளது.
“இந்த காரணங்கள் 18 முதல் 32 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களுடன் ஒத்துப்போகவில்லை, அவர்கள் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் முன், மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.
அவர்களின் இறப்புக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் மரணத்திற்கு வறுமை காரணமாக இருக்கலாம் என்று இராணி கூறியுள்ளார்.
மரணத்திற்கான உண்மையான காரணங்களைத் தீர்மானிக்க, இரத்தப் பரிசோதனைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை மற்றும் சக ஊழியர்களின் சுகாதாரப் பதிவுகளையும் கவனமாக விசாரிக்குமாறு, பி.எஸ்.எம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அனைத்து விவரங்களையும் தொகுக்க நாம் ஒரு தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தவிர்த்துவிடாமல், வேர் வரை சென்று உண்மை காரணத்தை அறிய முயற்சிக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.