சனிக்கிழமை அதிகாலையில், ரவாங் பத்து ஆராங்கில், போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரு நபர்களின் குடும்பத்தார், போலிசின் அந்நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவரின் மனைவியைக் காணவில்லை, அவரின் நிலை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மைத்துனர்களான அவர்கள் இருவருடன், அவர்களது மற்றொரு நண்பரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குழு வாரியானக் கொள்ளை வழக்குகளில் சம்பந்தமுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்கள் சுடப்பட்டனர் என்ற போலிஸ் அறிக்கையால் அதிர்ச்சியடைந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது கணவர் ஜி தவசீலன், 31, தனது அக்காள் ஜி மோகனாம்பாள், 35, அவரது கணவர் வி ஜனார்த்தனன், 40 மற்றும் நண்பர் எஸ் மகேந்திரனுடன், 23, செர்டாங்கில் உள்ள ஓர் உணவகத்துக்கு இரவு உணவுக்காகச் சென்றதாக ஜஸ்மிண்டர் கோர், 31, கூறினார்.
இலங்கை நாட்டுக்காரரான ஜனார்த்தனன், மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர், தற்போது அவர் இங்கிலாந்து வேலை செய்து வருகிறார்.
தற்போது, போர்ட்ஸ்மௌத்தில் குடியிருக்கும் ஜனார்த்தனன், தன் மனைவி மற்றும் 3 பிள்ளைகளோடு, நோய்வாய்ப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினரைக் காண, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மலேசியா வந்ததாக ஜஸ்மிண்டர் தெரிவித்தார்.
நால்வரையும் காணவில்லை என, சனிக்கிழமை போலிஸ் புகார் செய்தும், அவர்களில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை மறுநாள், ஞாயிற்றுக்கிழமையே போலிசார் தெரிவித்ததாக அவர் மேலும் சொன்னார்.
“எனக்கு முறையான விளக்கம் தேவை, என் கணவருக்கு என்ன நேர்ந்தது, என் கணவரின் அக்காள் எங்கே, அவரின் கணவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்?
“அவர்களின் பிள்ளைகளிடம் நான் என்ன சொல்வது?” என்று ஜஸ்மிண்டர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் ஜனார்த்தனன், மலேசியாவில், கொல்லை சம்பவத்தில் ஈடுபட்டார் என்று கூறுவது அறிவுக்கு எட்டாத விஷயமாகவே உள்ளது என்றார் அவர்.
“எங்களுக்கு நீதி கிடைக்காத வரை, மோகனாம்பாளின் நிலை தெரியாத வரை, நாங்கள் கொல்லப்பட்ட மூவரின் உடல்களையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்றும் ஜஸ்மிண்டர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட நால்வரும், ஜனார்த்தனன் வாடகைக்கு எடுத்திருந்த பெரோடுவா அல்ஸா காரில் பயணம் செய்தனர். ஆனால், போலிசார் துரத்திச்சென்ற கார் வோல்ஸ்வேகன் போலோ இரகத்தைச் சேர்ந்தது. மேலும், அவர்கள் பயணம் செய்த அல்ஸா, அவர்கள் உணவருந்த சென்றக் கடைக்கு அருகிலேயேக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜனார்த்தனன் மோகனம்பாளின் மூத்த மகன், லோகநாதரன், 17, தன் தந்தை போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
“மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்தேன். என்னால் நம்ப முடியவில்லை, என் அப்பா அப்படிபட்டவர் அல்ல, என் அம்மாவையும் காணவில்லை. எங்களுக்கு எங்கள் அம்மா வேண்டும், போலிஸ் அவரை கண்டுபிடித்து கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“எங்களுக்கு அம்மாவைத் தவிர, வேறு யாரும் இல்லை. எங்களுக்கு இங்கிலாந்தில் ஓர் எதிர்காலம் இருக்கிறது,” என லோகநாதரன் தெரிவித்தார்.
அக்குடும்பத்திற்கான வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா, நாட்டின் காவல்துறைத் தலைவர் இந்த விஷயத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், மோகனம்பாளுக்கு என்ன நடந்தது என்பதனை அவர்களுக்குத் தெரியபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.