ஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை- டிஏபி-இன் பிடாயு இனத் தலைவர் சாடல்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சரவாக்கில் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவதை டிஏபி-யைச் சேர்ந்த பிடாயு தலைவர் ஒருவர் கண்டித்தார்.

சிரியான் டிஏபி இளைஞர் தலைவரான புரோலின் நிக்கல்சன், “தீவகற்பக் கலாச்சாரத்தை” சரவாக் கொண்டு வர வேண்டாம் என்று கூறினார்.

“ஹாடிக்கு நான் கூற விரும்புவது இதுதான் – வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேச வேண்டாம், அதிலும் குறிப்பாக சரவாக்கில் வேண்டவே வேண்டாம். அப்படிப்பட்ட பேச்சுகளுக்கு சரவாக்கில் இடமில்லை. அவை மலேசியர்களைப் பிரித்து விடும்”, என்று புரோலின் ஓர் அறிக்கையில் கூறினார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு நேற்று பாஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஹாடி, டிஏபி-யை நிராகரிக்குமாறு சரவாக்கியர்களைக் கேட்டுக்கொண்டார். அது சரவாக்கையும் அதன் வளத்தையும் சீனர்களின் வசமாக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பூமிபுத்ராக்கள் ஒன்றுபட்டு சீனர்கள் ஆதிக்கம் செலுத்த இடமளிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹாடி சரவாக்கியர் இதயத்தைப் புரிந்துகொள்ளாத ஒரு “சந்தர்ப்பவாதி” என்று புரோலின் குறிப்பிட்டார்.

“சரவாக் மக்கள் குறிப்பாக டாயாக் இன மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, அவர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் முன்றாந்தர குடிமக்கள்போல் நடத்தப்பட்டபோது ஹாடி எங்கே இருந்தார்?

“இப்போது தேர்தல் நெருங்கிவரும்போது மட்டும் டாயாக் மக்களை நாடி வருவது ஏன்?”, என்றவர் காட்டமாகக் கேட்டார்.

சரவாக்கில் 2021-இல் சட்டமன்றத் தேர்தல் நடக்க வேண்டும். அதற்கு முன்னதாகக்கூட நடக்கலாம்.