பிகேஆர் தலைவருக்கும் அவருடன் ஒத்துப்போகாத உறுப்பினர்களுக்குமிடையில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் விடுத்துள்ள கோரிக்கைக்கு அன்வார் இப்ராகிம் இணங்குவார்போல் தோன்றவில்லை. சமரசக் கூட்டம் எதற்கு வழக்கமான பிகேஆர் கூட்டங்களே போதுமே என்று அன்வார் கூறியிருப்பது அதைத்தான் உணர்த்துகிறது.
“அரசியல் விவகாரக் கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடக்கிறது, மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டம் மாதமொரு முறை நடக்கிறது.
“அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாய்ப் பணிவுடன் அழைக்கிறோம். காப்பி, டீ எல்லாம் உண்டு”. சாபா, கோத்தா பெலுட்டில் மலேசிய தின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அன்வாரிடம் ஸுரைடாவின் கோரிக்கைக்குப் பதில் என்ன செய்தியாளர்கள் வினவியதற்கு அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நேற்று, ஸுரைடா அன்வார் சிறப்புக் கூட்டத்துக்கு ஒத்துக்கொண்டால் தவிர சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் இரு பிரிவுகளுக்குமிடையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார்.
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவான தரப்பினர் அன்வார் தலைமையேற்கும் கட்சிக் கூட்டங்களைப் புறக்கணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தலைவர்களுக்கிடையில் விரிசல் பெரிதாகிக் கொண்டே போகிறது.
இதனிடையே, அஸ்மின் சம்பந்தப்பட்ட செக்ஸ் காணொளி விவகாரத்தில் அன்வாருக்குத் தொடர்பிருப்பதாக அஸ்மின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அன்வார் அதை மறுக்கிறார்.
அஸ்மினின் விசுவாசிகளில் ஸுரைடா, சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி முதலானோர் உள்ளனர்.