பிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது வழக்கமல்ல- ஜாகிர் விவகாரம் குறித்து மகாதிர் கருத்து

ஒரு பிரச்னை என்றால் அதை அப்படியே தூக்கி எறிந்து விடுவது மலேசியாவின் வழக்கமல்ல என்கிறார்  பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.  சர்ச்சைக்குரிய வெளிநாட்டுச் சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் விவகாரம்  அதற்கு ஓர் உதாரணம் என்றாரவர்.

“என்ன காரணத்தாலோ, இன உணர்வுகள் இப்போது மேலோங்கி நிற்கின்றன. ஒருவர் வந்து ஏதோ சொல்லி அது அவர்களுக்குப் புரியாவிட்டாலும் அவர்களின் சிந்தனைக்கேற்ப இருந்துவிட்டால்போதும் அவர் சொல்வது பிடித்துப் போகிறது…..அந்த மனிதரை(ஜாகிர்) பெரும் போராளி என்று நினைக்கிறார்கள், அவரை அவர்களுக்குப் பிடித்துப் போகிறது.

“இந்த நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அந்தக் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுபோல் ஆகிவிடும். மலேசியாவில் இதுபோன்ற விவகாரத்தைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு சிறு விவகாரமல்ல. எடுத்து அப்படியே தூக்கி எறிவதற்கு.

“மலேசியாவில் அது நமது வழக்கமுமல்ல. அப்படிச் செய்தால் அது மேலும் பிரச்னை ஆகி விடும்”, என்று மகாதிர் இன்று வர்த்தக வானொலியான பிஎப்எம்-முக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

ஜாகிர் நாய்க்மீது நடவடிக்கை எடுப்பதால் அரசியல் ரீதியில் பாதிப்பு ஏற்படலாம் என்பதை ஒப்புக்கொண்ட மகாதிர் அவ்விவகாரத்தைச் சீனமொழிப் பள்ளி விவகாரத்துடன் ஒப்பிட்டார்.

தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய ஒற்றுமைக்குத் தடங்கலாக இருந்தாலும் சீனச் சமூகத்தைன் உணர்வுகளை மதிக்க வேண்டியுள்ளது என்றாரவர்.

“தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்றாலும் சீனர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவற்றை மூடி விடலாம் என்று நாம் சொல்வதில்லை. சீனர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாதவாறு அவ்விவகாரத்தைக் கையாள வேண்டியுள்ளது”, என்றவர் விளக்கினார்.

ஜாகிர் நாய்க்குக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கியது முந்தைய அரசாங்கம்தான் என்பதையும் மகாதிர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், சீனர்களைத் “திரும்பிப் போங்கள்” என்று கூறியும் மலேசிய இந்தியர்களின் விசுவாசம் குறித்துக் கேள்வி எழுப்பியும் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்ததை அடுத்து ஜாகிர் பொது இடங்களில் உரையாற்றத் தடை விதிக்கப்பட்டிருப்பதையும் மகாதிர் சுட்டிக்காட்டினார்.

ஜாகிரை எங்காவது அனுப்பி வைக்கலாம் என்றால் “அவரை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாதான் அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளதே என்று வினவியதற்கு இந்தியா அதை வலியுறுத்திக் கேட்கவில்லை என்றார்.

“(இந்தியப்) பிரதமர் (நரேந்திர) மோதியைச் சந்தித்தபோது இவரைத் திருப்பி அனுப்பச் சொல்லி அவர் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் இந்த மனிதர் பிரச்னையாகத்தான் இருப்பார்”, என்றார்.