பி இராமசாமி : ‘புதிய அரசாங்கம், ஆனால் அதே பழைய காவல்துறை’

சமீபத்தில், சிலாங்கூர், பத்து ஆராங்கில், காவல்துறையினருக்கும் மற்ற மூன்று பேருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த முழு விசாரணையைத் தொடங்குமாறு, பினாங்கு துணை முதல்வர் II, பி இராமசாமி இன்று புத்ராஜயாவை வலியுறுத்தினார்.

சம்பவம் குறித்து, காவல்துறையினரின் பதிவுகள் தொடர்பான சர்ச்சையினால், இராமசாமி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த, ஜனார்த்தனன் விஜயரத்னம், அவரது மைத்துனர் தவச்செல்வன் மற்றும் மகேந்திரன் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேர் இருந்த ஒரு காரை, பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ்சில் காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர்கள் அந்த உத்தரவைப் புறக்கணித்ததால் சுமார் 7 கிமீ, அந்தக் காரைத் துரத்திச் சென்றதாகவும் போலிஸ் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த நபர்கள் கொள்ளையர்கள் என்று தெரிவித்த போலீசார், துரத்தும்போது அவர்களில் இருவர் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காகவே போலிஸ் திருப்பிச் சுட்டதாகவும் கூறியுள்ளனர்.

அவர்களுடன் இருந்த, ஜனார்த்தனன் மனைவி, மோகனாம்பாள் கோவிந்தசாமி போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் போலிஸ் தலைவர் நூர் அஸாம் ஜமாலுட்டின் தெரிவித்தார்.

போலிசார் மோகனாம்பாளின் நிலை குறித்து, எந்தவொரு தகவலும் கொடுக்க மறுக்கின்றனர் என அவர்கள் குடும்பத்தினரின் வழக்குரைஞர் சிவாநந்தன் இராகவா குற்றம் சாட்டியிருந்தார்.

காவல்துறையினர் தங்கள் சம்பவப் பதிவில் உறுதியாக இருக்கும்போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு கதை இருக்கக்கூடும் என்று இராமசாமி கூறினார்.

காவல்துறையினர் தங்கள் நிகழ்ச்சிகளின் பதிவில் ‘பழையக் கதை’ ஒன்றை மீண்டும் மீண்டும் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“ரவாங் துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். சந்தேகத்திற்குரிய கொள்ளையர்களைப் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடையச் செய்த பல சம்பவங்கள், காவல்துறையின் சாட்சியங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.

இன்றுவரை, போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இறந்த வழக்குகளில், காவல்துறையினரைப் பொறுப்பேற்கச் செய்வது மற்றும் துப்பாக்கிச் சூடு நியாயமானதா என்பதைத் தீர்மானிப்பது போன்ற எந்தவொரு தீவிர விசாரணையும் நடத்தப்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

உயர்மட்டக் காவல்துறை அதிகாரி அப்துல் ஹமீத் படோர் உத்தரவாதம் அளித்தபோதும், போலிஸ் நடவடிக்கைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

“தடுப்புக் காவல் மரணங்கள், போலிஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக ஏற்படும் மரணங்கள் மற்றும் சீருடை அணிந்த நபர்களிடமிருந்து வெளிப்படும் பிற முறைகேடுகள் அனைத்தும் பொது மக்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது.

“பத்து ஆராங் கொலை முதல் சம்பவம் அல்ல, நிச்சயமாக அது கடைசியாகவும் இருக்காது. இங்கு முக்கியமானது என்னவென்றால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும்,” என்றார் இராமசாமி.