ஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்- இந்தியா வலியுறுத்து

இஸ்லாமிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புமாறு இந்தியா வலியுறுத்திக் கேட்கவில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருப்பதைப் புது டில்லி மறுக்கிறது. .

ஜாகிரை நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா “விடாப்பிடியாகவும் தளராமலும்” முயன்று வருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

“அவரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம்(2018, ஜனவரியில்). ஜாகிர் இங்கு திரும்பி வர வேண்டும். அதற்காக வேண்டியதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்”, என்று ஜெய்சங்கர் கூறியதாக அந்நாளேடு தெரிவித்தது.

இம்மாத முற்பகுதியில் இந்தியப் பிரதமர் மலேசியப் பிரதமரை ரஷ்யாவில் சந்தித்தபோதுகூட ஜாகிரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை மோதி மகாதிரிடம் வலியுறுத்தினார் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

நேற்று பிஎப்எம் வானொலி நிலையத்தில் ஒலியேறிய நேர்காணலில் மகாதிர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாற்றியபோதுதான் இந்திய வெளியுறவு அமைச்சர் அவ்வாறு கூறினார்.

அந்த நேர்க்காணலில், ஜாகிர் நாய்க்கை ஏற்றுக்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை என்றும் இந்தியாவும்கூட அச்சமயப் போதகரைத் திருப்பி அனுப்பச் சொன்னாலும் அதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவில்லை என்றும் மகாதிர் கூறியிருந்தார்.