மூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்

சிபிதாங் எம்பி யமானி ஹவிஸ் மூசா பெர்சத்துவில் சேர்ந்ததை அதன் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் வரவேற்றார்.

யமானி 2018 பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை எம்பி ஆக இருந்தார். இவ்வாரம் அவர் பெர்சத்துவில் சேர்ந்தார்.

யமானி பெர்சத்துவில் சேர்ந்ததால் அக்கட்சியின் எம்பிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது என்றும் அது நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் வலுச் சேர்க்கிறது என்றும் முக்ரிஸ் கூறினார்.

சாபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானின் மூத்த புதல்வரான யமானி நேற்று பெர்சத்து அவைத் தலைவரும் பிரதமருமான டாக்டர் மகாதிர் முகம்மட்டிடமிருந்து பெர்சத்துக் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றார்.

யமானியைச் சேர்த்து சாபா பெர்சத்து இப்போது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

அந்த வகையில், அதுதான் சாபாவில் முதலமைச்சர் ஷாபி அப்டாலின் பார்டி வாரிசான் சாபாவை அடுத்து இரண்டாவது பெரிய கட்சி.

-பெர்னாமா