தனக்குப் பதிலாக, இன்னொரு நபரின் பெயர் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாக வெளியான செய்திகளை பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.
“அப்படி எதுவும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரவர் சொந்த ஆசைக்கு இங்கு தடை ஏதும் இல்லை.
“இது எனக்கு சற்று பொருத்தமற்றதாகத் தெரிகிறது. இது விவாதிக்கப்பட்டதா, சரிபார்க்கப்பட்டதா, பதில் இல்லை,” என்று அவர் கூறியதாக ப்ளூம்பெர்க் மேற்கோளிட்டுள்ளது.
டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு மாற்றாக, பி.கே.ஆர். துணைத் தலைவர் அஸ்மின் அலி அல்லது முக்ரிஸ் மகாதிர் அப்பதவிக்கு வரலாம் எனக் கருதப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அன்வர் அவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அன்வாருடன் உடன்படாத அஸ்மின், ஒரு பாலியல் வீடியோ ஊழலில் சிக்கினார். அன்வாருக்குப் பதிலாக, அஸ்மினை நியமிக்க மகாதீர் விரும்புவதாக ஊகங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ கிளிப்புகள் வெளியானதாக கூறப்பட்டது.
இதுபற்றி கேட்டபோது, தான் தனது வாக்குறுதியில் உறுதியாக இருப்பதாகக் கூறிய மகாதிர், தனக்குப் பிறகு அப்பதவியை அன்வாரிடம்தான் ஒப்படைக்கப்போவதாக கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்
இதற்கிடையே, மகாதிர் தனது மகன் முக்ரிஸ்-ஐப் பிரதமராக நியமிப்பதை அம்னோ தலைவர்களும் எதிர்த்து வருவதாகத் தெரிகிறது.
2018-வது பொதுத் தேர்தலில், பி.என்.-ஐ வீழ்த்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020-ல், பதவி மாற்றம் ஏற்படும் என்று அன்வார் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“அந்த நேரத்தில் அது நடக்க வேண்டும் என்று ஒரு புரிதல் உள்ளது,” என்று அன்வார் கூறினார்.