‘புதிய மலேசியக் கதை கருத்தரங்கை போலீசார் விசாரிக்க வேண்டும்’ எனும் தலைப்பில், இன்று, மலேசியாகினி வலைதளத்தில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், வெளியிட்ட ஓர் அறிக்கை தொடர்பில், புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சருமான ஸ்டீவன் சிம் ச்சீ கியோங் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
செப்டம்பர் 14, 2019 அன்று, ‘அனாக் மலேசியா? எங்கள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால மலேசியாவின் கதை’ என்றத் தலைப்பில் ஒரு மன்றத்தில் பேச நான் அழைக்கப்பட்டேன்.
மலேசியர்களின் பொறுப்புகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துடன், அக்கருத்தரங்கு கிறிஸ்தவர்களுக்காக, தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனது உரையில், மலேசியாவின் ஒரு நல்ல குடிமகனாக விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதனை நான் எடுத்துரைத்துள்ளேன், அதற்கு பைபிளில் கூறப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களை முன்வைத்தேன். எடுத்துக்காட்டாக, நீதி, வெளிப்படைத்தன்மை, ஏழைகளுக்கு உதவுதல், ஊழல், ஒடுக்குமுறை மற்றும் இனவெறியை எதிர்ப்பது பற்றியெல்லாம் பேசினேன்.
நான் எந்த மதத்தையும் குறைகூறவோ விமர்சிக்கவோ இல்லை, மாறாக மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிற மதங்களின் நன்மதிப்புகளையும் கடைப்பிடிக்கும் குடிமக்களாக உருவாக வேண்டுமென அழைப்புவிடுத்தேன்.
எனவே, மலேசிய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மதிக்கவும், இந்த நாட்டில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடையே வெறுப்பையும் பிளவுகளையும் பரப்புவதை நிறுத்தவும் துவான் இப்ராஹிம் துவான் மானை நான் கேட்டுக்கொள்கிறேன்.