ராவாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள்- போலீஸ்

சிலாங்கூர் போலீஸ் கடந்த சனிக்கிழமை ஜாலான் ராவாங்- பத்து ஆராங் சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் இருவர் 08 குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூரில் அவர்கள் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.

செய்தியாளர் கூட்டமொன்றில் அச்சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களைத் தெரிவித்த மாநில போலீஸ் தலைவர் நூர் அசாம் ஜமாலுடின், ஜி.தவசெல்வன்(31), எஸ்.மகேந்திரன் (23), ஜே.விஜயரத்னம் (40) ஆகியோரே அம்மூவருமாவர் என்றார்.

தவசெல்வன், மகேந்திரன் ஆகிய இருவரது அடையாளமும் தேசிய பதிவுத் துறையில் பதிவாகியுள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு உறுதி செய்துகொள்ளப்பட்டது. விஜயரத்னத்தை அவரின்  மகள் அடையாளம் காட்டினார்.

“தவசெல்வன்மீது 23 குற்றப் பதிவுகள் உள்ளன. அவர் 1969 அவசரகாலச் சட்டத்தின்கீழ் 2006-இலும், குற்றத் தடுப்புச் சட்ட(பொகா)தின்கீழ் 2014-இலும் சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கோலா சிலாங்கூர் மாவட்ட போலீசும் அவரைத் தேடிக் கொண்டிருந்தது.

“ராவாங் 08 குண்டர் கும்பல் உறுப்பினன் என்று அடையாளம் காணப்பட்ட மகேந்திரன் செந்தூலில் நிகழ்ந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் சம்பட்டிருக்கிறார்.”, என்று நூர் அசாம் கூறினார்.

விஜயரத்னம் யுனைடெட் கிங்டத்தில் நிரந்தர குடியிருப்புத் தகுதி கொண்டிருப்பவரா, ஆகஸ்ட் 31-இல்தான் அவர் மலேசியா வந்தாரா என்று வினவப்பட்டதற்கு அன்று அவர் நாட்டுக்குள் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது விஜயரத்னத்தின் மனைவி ஜி.மோகனாம்பாளும் உடன் இருந்ததாகக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்த நூர் அசாம், சம்பவம் நடந்த நாளிலிருந்து காணப்படாதிருக்கும் அவரை போலீசும் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார். தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமாய் அவர் கேட்டுக்கொண்டார்.

“சம்பவம் நடந்த அன்று அப்பெண் காரில் இருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது. காரில் மூவர் மட்டுமே இருந்தனர்”, என்றாரவர்.