ஹாடி, பிரதமர் பதவி பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டு அம்னோவுக்கு உதவுவது ஏன் என்பதை விளக்க வேண்டும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் என்ற பக்கத்தான் ஹரப்பானின் ஒருமித்த முடிவு குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என பிகேஆர் இளைஞர் தலைவர் ஒருவர் அறிவுறுத்தினார்.

அதற்குப் பதில், அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர் அம்னோ மீண்டும் எழுச்சிபெற உதவுவது ஏன் என்பதை அவரது கட்சியினருக்கு விளக்குவது மேல் என தேசிய பிகேஆர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் ஆலோசனை கூறினார்.

“அவர் மற்றக் கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது. அதற்குப் பதிலாக, இதுகாறும் பாஸின் எதிரியாகவும் நாட்டை அழிக்கும் சக்தியாகவும் கருதப்பட்ட அம்னோவை மீண்டும் தூக்கி நிறுத்த உதவுவது ஏன் என்பதை அவர் பாஸ் அடிமட்ட உறுப்பினர்களுக்கு விளக்குவது நல்லது”, என்று சைட் பாட்லி இன்று காலை ஓர் அறிக்கையில் கூறினார்.

அன்வார் இப்ராகிமைவிட டாக்டர் மகாதிர் முகம்மட்தான் அதிக தகுதி படைத்தவர் என்று ஹாடி கூறியதாக நேற்று சினார் ஹரியான் நாளேட்டில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலோர் மகாதிரைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

“அன்வார் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. இடைத் தேர்தல் வழியாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவருக்குள்ள ஆதரவைக் கணிப்பதற்கில்லை.

“இப்படிச் சொல்வதால் நான் சிண்டு முடித்து விடுவதாகக் கூறக்கூடாது”, என்றும் ஹாடி கூறினார்.